உலக செய்திகள்

ஈராக்கில் மீண்டும் ஒரு தளபதி சுட்டுக்கொலை + "||" + Pro-Iranian Militia Leader Reportedly Killed In Iraq by Unidentified Gunmen

ஈராக்கில் மீண்டும் ஒரு தளபதி சுட்டுக்கொலை

ஈராக்கில் மீண்டும் ஒரு தளபதி சுட்டுக்கொலை
ஈராக்கில் மீண்டும் ஒரு தளபதியை மர்ம நபர்கள் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3 ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

இந்நிலையில் காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது.

ஆனால் அமெரிக்கா அதனை முற்றிலுமாக நிராகரித்தது. ஏவுகணை தாக்குதலில் லேசான சேதங்களே ஏற்பட்டதாகவும் தங்கள் நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில், பாக்தாத் நகரில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தொலைவில் உள்ள கர்பலா நகரில் ஈரான் ஆதரவு போராட்ட குழு (சையது பிஎம்எப் குழு) தளபதி அப்பாஸ் அலி அல் சைதி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

உள்ளூர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மர்ம நபர்கள் சுட்டதாக கூறப்பட்டுள்ளது. அல் சைதி கொலை குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.  

ஈராக்கில் மேலும் ஒரு  தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.