உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: லாகூர் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு + "||" + Pak court annuls ex-President Musharraf's death penalty

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: லாகூர் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: லாகூர் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
லாகூர்,

பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை முஷரப் அதிபராக இருந்தார். அப்போது, 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர நிலையை அமல்படுத்தினார். அதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் நீக்கப்பட்டனர்.


இதைத்தொடர்ந்து பதவிக்கு வந்த நவாஸ் ஷெரீப் அரசு, கடந்த 2013-ம் ஆண்டு, முஷரப் மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்தது. அவசர நிலையை அமல்படுத்தியதற்காக, இவ்வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க இஸ்லாமாபாத்தில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது.

6 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த மாதம் 17-ந் தேதி தனிக்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

முஷரப், தற்போது துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில், தனிக்கோர்ட்டு உத்தரவை ரத்துசெய்யுமாறும், தனது மனு மீது முடிவு செய்யப்படும்வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, நவாஸ் ஷெரீப் அரசின் மந்திரிசபை ஒப்புதல் இல்லாமல் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டதாக கூடுதல் அட்டார்னி ஜெனரல் இஷ்டியாக் அகமது கான், கோர்ட்டில் தெரிவித்தார். முஷரப் மீதான குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானவை என்றும் கூறினார்.

இந்நிலையில், லாகூர் ஐகோர்ட்டு, முஷரப்புக்கு மரண தண்டனை விதித்த தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது, சட்ட விரோதமானது என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் சையது மசார் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி, சவுத்ரி மசூத் ஜஹாங்கீர் ஆகியோர் ஒருமனதாக இந்த உத்தரவை பிறப்பித்தனர். மேலும், முஷரப் மீதான வழக்கு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இந்த உத்தரவின் மூலம், முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்தாகி விட்டதாக அரசுத்தரப்பு வக்கீல்களும், முஷரப்பின் வக்கீல்களும் உறுதிப்படுத்தினர். இது, முஷரப்புக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.