தேசிய செய்திகள்

காஷ்மீரில் பரிதாபம்: பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலி - மேலும் ஒரு வீரர் மாயம் + "||" + 3 Army soldiers among 8 killed in avalanches in Kashmir

காஷ்மீரில் பரிதாபம்: பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலி - மேலும் ஒரு வீரர் மாயம்

காஷ்மீரில் பரிதாபம்: பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலி - மேலும் ஒரு வீரர் மாயம்
காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. மறுபுறம் பனிச்சரிவு நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

குப்வாரா, பந்திப்போரா, பாரமுல்லா மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்ந்து வரும் பனிச்சரிவு சம்பவங்களால் ஏராளமான வீடுகள், மாட்டு கொட்டகைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.


இந்த நிலையில் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாச்சில் செக்டாரில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அதிக எடை கொண்ட பனிப்பாறைகள் விழுந்து அமுக்கியதால் முகாம் பலத்த சேதமடைந்தது.

இந்த சம்பவத்தில் 5 ராணுவ வீரர்கள் பனிப்பாறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அவர்களை மீட்க ராணுவம் துரித நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 4 வீரர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். ஆனால் இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்களுடன் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மற்றொரு வீரரை காணவில்லை. அவரை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முன்னதாக கண்டர்பெல் மாவட்டத்தின் ரைசன் கோலன் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த 9 பேர் சிக்கிக்கொண்டனர். அங்கு உள்ளூர்வாசிகளும், போலீசாரும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்களும் அடங்குவர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் இதுபோன்ற பனிச்சரிவு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பனிச்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.