தேசிய செய்திகள்

உ.பி.யில் சோகம்; ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற தெரு நாய் + "||" + Stray dog enters operation theatre of private hospital in UP, mauls newborn baby to death

உ.பி.யில் சோகம்; ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற தெரு நாய்

உ.பி.யில் சோகம்; ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற தெரு நாய்
உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த தெரு நாய் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,

பொதுவாகவே, அரசு மருத்துவமனைகள் என்றாலே சரியாக மருத்துவம் பார்க்கப்படுவதில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான் மருத்துவமனைகளும் உள்ளன. அதுவும் உத்தர பிரதேசத்தில் மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி சில தனியாா் மருத்துவமனைகளின் செயல்பாடுகளும் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. 

கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தனா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் கடந்த மாதத்தில் 100 குழந்தைகள் இறந்தன. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி காஞ்சன். நிறைமாத கர்ப்பிணியான காஞ்சனை பிரசவத்துக்காக நேற்று  அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காஞ்சனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என கூறி உள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் காஞ்சனுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என கூறினா். இதற்கு ரவிக்குமாரும் சம்மதித்தார். உடனே காஞ்சனை அறுவை சிகிச்சை அரங்குக்குள் அழைத்து சென்றனர். அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆபரேஷனை முடித்து விட்டு வெளியே வந்த மருத்துவர்கள் குழந்தை நலமாக பிறந்துள்ளதாகவும், உங்கள் மனைவியை வார்டில் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் குழந்தை ஆபரேஷன் தியேட்டரில் சிறிது நேரம் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பின்னர் காஞ்சனை வெளியில் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துள்ளனர். குழந்தை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தது. திடீரென மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஒரு தெரு நாய் அறுவை சிகிச்சை அரங்கின் உள்ளே புகுந்து விட்டதாக சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் உள்ளே ஓடிச்சென்று பார்த்த போது குழந்தையின் கை, கால், முகம் ஆகியவற்றில் நாய்க்கடி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அப்போது குழந்தையை கடிக்க மீண்டும் நாய் அருகில் வந்தது. உடனே ரவிக்குமார் கூச்சல் போடவும், ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஓடி வந்து நாயை விரட்டினர்.

பின்னர் குழந்தையை டாக்டர்கள் சோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், ரவிகுமாரிடம் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் பணம் கொடுக்க முன்வந்ததாகவும் கூறியுள்ளனா். ஆனால் ரவிக்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மருத்துவமனை உரிமையாளர், டாக்டர் மோஹித் குப்தா மற்றும் பிரசவத்தின்போது உடனிருந்த சில ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டாக்டர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) சந்திர சேகர் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி, உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் மூன்று மாத குழந்தை, வீட்டின் அருகில் தெரு நாய்களால் கடித்து குதறி கொல்லப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார்  உத்தரபிரதேசத்தில் 12 குழந்தைகள் வரை தெருநாய்களுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.