தேசிய செய்திகள்

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது + "||" + Ayyappa Maharajothi in Sabarimala

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது
கேரளாவில் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகர ஜோதியை கண்டு பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
சபரிமலை, 

சபரிமலை பொன்னம்பல மேட்டில்  மகர ஜோதி தரிசனம் நடைப்பெற்றது. ஜோதி வடிவான அய்யப்பனை காண பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 2019–2020–ம் ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த டிசம்பர் மாதம் 27–ந் தேதி நிறைவு பெற்ற நிலையில், மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நடைபெறும் மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைப்பெற்றது.

அதன்படி அதிகாலை 2.09 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடந்தது. திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரத்தில் இருந்து கன்னி அய்யப்பன்மார் கொண்டு வரும் நெய் மூலம் அய்யப்பனுக்கு நெய்அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6  மணிக்கு சன்னிதானம் வந்து சேர்ந்த திருவாபரண பெட்டிகளுக்கு 18–ம் படிக்கு கீழ்பகுதியில் வைத்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த திருவாபரண பெட்டிகள் பாரம்பரிய முறைப்படி தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டு, 18–ம் படி வழியாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து 6.40 மணிக்கு திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, 6.51 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமான ஜோதி தெரிந்தது. இதுவே மகர ஜோதி என்றழைக்கப்படுகிறது. 

பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக காட்சி தரும் சாமியை தரிசித்த அய்யப்ப பக்தர்கள் சுவாமியே சரணம் அய்யப்பா...  சுவாமியே சரணம் அய்யப்பா.... என்று சரணம் கோஷம் எழுப்பினர். மகரஜோதியைக்கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

இந்த மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். 

சபரிமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

வழக்கத்தை விட இந்த ஆண்டு பம்பை, சன்னிதானம் உட்பட பல பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 950 பஸ்கள் பம்பைக்கு இயக்கப்பட்டுள்ளது.

இதில் 300 பஸ்கள் நிலக்கல் –பம்பைக்கு செயின் சர்வீஸ் நடத்தும். மற்ற பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதையொட்டி, 100–க்கு மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...