தேசிய செய்திகள்

பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து + "||" + JP Natta elected uncontested as BJP national leader: Congratulations to PM Modi and Amit Shah

பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

பா.ஜனதா தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு: பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து
பாரதீய ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக ஜே.பி.நட்டா நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா கடந்த 5½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் பா.ஜனதா கட்சி சில பின்னடைவுகளை தவிர, பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது.


மோடி அரசில் அமித்ஷா உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரியும், கட்சியின் முன்னணி தலைவருமான ஜே.பி.நட்டா கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போது செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவை தலைவராக நியமிக்க அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின்கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிந்து மனு தாக்கல் செய்தனர். ஜே.பி.நட்டாவை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. இதனால் ஜே.பி.நட்டா பா.ஜனதா கட்சியின் 14-வது தேசிய தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பை பா.ஜனதா தேர்தல் நடவடிக்கைக்கான பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார்.

ஜகத் பிரகாஷ் நட்டா என்கிற ஜே.பி.நட்டாவுக்கு வயது 59. இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தனது கல்லூரி பருவத்திலேயே அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து செயல்பட்டார். பின்னர் பா.ஜனதா இளைஞர் பிரிவில் சேர்ந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பா.ஜனதாவின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்துள்ளார்.

இவர் அனைவருடனும் நெருங்கிப் பழகக் கூடியவர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நம்பிக்கைக்குரியவர். அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்களுடனும் இணக்கமான உறவு வைத்திருப்பவர். இமாசலபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசில் மந்திரியாக பணியாற்றியுள்ளார். பல மாநிலங்களில் பா.ஜனதாவின் பிரசார பொறுப்பாளராக இருந்துள்ளார்.

இவரும் அமித்ஷாவை போலவே சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு கட்சியினரிடம் உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் நட்டாவின் முதலாவது சவாலாக உள்ளது. ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசை எதிர்த்து வெற்றி பெற அவரது தலைமையில் கட்சி கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.

அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், விஜய் ரூபானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

கட்சியின் தலைவராக இருந்த அமித்ஷா வழங்கிய பங்களிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் சிறந்த செயல்பாட்டாளர். அவரது தலைமையின்கீழ் இந்தியாவின் பல பகுதிகளில் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு (அரசு அமைக்க) பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது.

நட்டா தனது பதவிக்காலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவிக்கிறேன். நட்டா, அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக கடுமையாக பணியாற்றி உள்ளார். அவர் அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும் செயலாற்றுபவர். கட்சியின் இளைஞர் பிரிவு, எம்.எல்.ஏ., இமாசலபிரதேச மந்திரி, கட்சியின் தலைமை அமைப்பு பணிகள், எம்.பி., மத்திய மந்திரி என அவர் எந்த பொறுப்பில் பணியாற்றினாலும் தனி முத்திரை பதிக்கக் கூடியவர் என்று நரேந்திர மோடி பேசினார்.

உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது, “ஜே.பி.நட்டாவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன், உங்கள் தலைமையில் பா.ஜனதா மேலும் வலுப்படும் என்றும், இன்னும் பெரிதாக வளரும் என்றும் நான் நம்புகிறேன். அவரது திறமையும், அனுபவமும் புதிய சாதனைகளை பெற்றுத்தரும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்றுத்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற்றுத்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
2. வேல் யாத்திரை நிறைவு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்பு - பா.ஜ.க. மாநில செயலாளர் பேட்டி
டிசம்பர் 6-ந் தேதி வேல் யாத்திரையின் நிறைவு விழா திட்டமிட்டபடி திருச்செந்தூரில் நடைபெறும். இதில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார் என்று பா.ஜ.க. மாநில செயலாளர் கே.டி.ராகவன் கூறினார்.
3. பீகார் தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும் சிவசேனா மீது பா.ஜனதா தாக்கு
பீகார் தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும் என சிவசேனாவை பா.ஜனதா தாக்கி உள்ளது.
4. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
5. முக்தார் அப்பாஸ் நக்வி,ஷானாவாஸ் ஹுசைன் ஆகியோரின் மனைவிகள் இந்துக்கள், இதுவும் லவ் ஜிஹாத்' தான் - திக்விஜய் சிங்
மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, பா.ஜனதா தலைவர் ஷானாவாஸ் ஹுசைன் ஆகியோரின் மனைவிகள் இந்துக்கள், இதுவும் லவ் ஜிஹாத் தான் என்று காங்கிரஸ் மூத்த திக்விஜய் சிங் கூறி உள்ளார்.