மாநில செய்திகள்

தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல் + "||" + 40,000 crore oil refinery in Thoothukudi

தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தென் மாவட்டங்களில் 6 புதிய தொழிற்சாலைகள்  தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை  தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையும், தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னை,

மாநிலத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை அவ்வப்போது கூடுவது வழக்கம்.

அமைச்சரவை கூட்டம்

அந்த வகையில் தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடை பெற்றது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 5.45 மணி வரை 1¼ மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள், மக்கள் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அங்கு 6 புதிய தொழில் நிறுவனங்களை அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் துறைமுக நகரமான தூத்துக்குடியில் அல்கெராபி என்ற நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை நேற்று வழங்கியது.

மின்சார கார் தொழிற்சாலை

இதேபோல் சீனாவைச் சேர்ந்த வின்டெக் என்ற நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் மின்சார கார்கள் தயாரிக்கும் தொழிற் சாலையை தொடங்க உள்ளது. இதற்கான ஒப்புதலையும் அமைச் சரவை நேற்று வழங்கியது.

மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் சில தொழிற்சாலைகளின் விரிவாக்கத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்

வருகிற மார்ச் மாத தொடக்கத்தில் சட்ட சபையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்.

அடுத்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டதாக கூறப் படுகிறது.