மாநில செய்திகள்

மத்திய அரசின் பத்ம விருது பெறுவோர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து + "||" + Of the Central government Padma Award recipients Greetings of Tamil political leaders

மத்திய அரசின் பத்ம விருது பெறுவோர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து

மத்திய அரசின் பத்ம விருது பெறுவோர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
மத்திய அரசின் பத்ம விருது பெறுவோர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசனின் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருது அறிவித்துள்ளது. கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் சிறந்த சமூக சேவையை அங்கீகரித்து அவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது அறிவித்துள்ளது. இந்த செய்திகளை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.


இதேபோல் கர்நாடக இசைப்பாடகர்கள் லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், சமூக மற்றும் கலாசார அடையாளங்களின் ஓவியங்களை சிறப்புற தீட்டும் மனோகர் தேவதாஸ், பிரபல சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாதஸ்வர இசையால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து வரும் காலீ ஷாபி மெகபூப் மற்றும் ஷேக் மெகபூப் சுபானி, விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் மேன் மேலும் பல விருதுகளை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தை சேர்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுகளை பெறும் சமூக சேவை மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சமுக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், தொழில் அதிபர் வேணு சீனிவாசன், இசைக்கலைஞர்களான லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 16 பேருக்கு பத்மபூஷண் விருதுகள், 141 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழகத்தில் இருந்து 7 பேருக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. அடுத்த ஆண்டிலாவது அதிக விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- “நாட்டின் பெருமைமிகு பத்ம விருதுகளை தமிழகத்தை சேர்ந்த காந்தியவாதியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தொழில் வளர்ச்சியில் மகத்தான பங்காற்றி வருகிற வேணு சீனிவாசன், சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன், கலைசேவைக்காக லலிதா, சரோஜா சகோதரிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்”.

முன்னாள் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:- பிரதமர் நரேந்திர மோடியின் அரசு திறமை, அர்ப்பணிப்பு, சாதனை போன்றவற்றை மட்டுமே அளவுகோலாக கொண்டு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் பெற இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகியவற்றை நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற பலருக்கும் பத்ம விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பத்ம விருதுகள் பெறும் தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் அனைவரையும் த.மா.கா. சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:- நாட்டின் சிறப்புமிக்க பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து, கும்மிடிப்பூண்டி, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் பேரணி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.