மாநில செய்திகள்

விரக்தியின் விளிம்பில் இருந்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை + "||" + MK Stalin speaks from the edge of despair Udayakumar Report

விரக்தியின் விளிம்பில் இருந்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை

விரக்தியின் விளிம்பில் இருந்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை
நிர்வாக காரணங்களுக்காகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளதாகவும், விரக்தியின் விளிம்பில் இருந்து மு.க.ஸ்டாலின் பேசிவருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை,

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்றைய தினம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாறுதல் பற்றி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது விந்தையாக உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிமாற்றம் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடந்து வரும் நிகழ்வு ஆகும். இதற்கு உள்அர்த்தம் கற்பித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எத்தனையோ ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அவ்வப்போது பணிமாற்றம் செய்தது நடக்காத நிகழ்வா என்ன?. இவற்றுக்கு எல்லாம் மேலாக, அப்போதைய அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய உமாசங்கரை அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் குடும்பம் நடத்திய தனியார் தொலைக் காட்சிக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தால் தற்காலிக பணிநீக்கம் செய்ததையும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் முடக்கப்பட்டதையும் அன்றைக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதனை மக்கள் இன்னும் மறக்கவில்லை, மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பாரத் நெட் உள் கட்டமைப்பு திட்ட டெண்டரில் முறைகேடு என்ற அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போதுதான் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இன்னும் நிறுவனங்களிடம் இருந்து தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியோ, விலைப்புள்ளியோ பெறப்படாத நிலையில், ஊழல், ஊழல் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது தான் விந்தையாக உள்ளது. அவர் விரக்தியின் விளிம்பில் இருந்து பேசி வருகிறார்.

அ.தி.மு.க. அரசு கடுமையான உழைப்பினால் பல துறைகளில் சாதனை புரிந்து, எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், அதன் நல்லாட்சிக்கு அத்தாட்சியாக வேளாண்மை தொழில், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட 10 துறைகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட 50 குறியீடுகளின் அடிப்படையில், 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதி ஆகியவற்றில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு இதனை பாராட்ட மனமில்லாது போனாலும் பரவாயில்லை. குறை கூறியது மட்டுமல்லாமல், முதல் இடத்தை தமிழ்நாட்டிற்கு அளித்தவர்களை அடிக்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம், தேசிய குற்ற ஆவண காப்பகம், தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு, மத்திய அரசின் புள்ளி விவரம் ஆண்டு புத்தகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு, இந்திய பொது நிதி புள்ளி விவரங்கள், கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு போன்ற அதிகாரபூர்வமான, நம்பத்தகுந்த மத்திய அரசுத்துறை புள்ளி விவரங்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் ஆய்வறிக்கைகளில் உள்ள வளர்ச்சி குறியீடுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு முதல் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின், இத்தகு உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் புள்ளி விவரங்களையே தவறு என்கிறாரா?, அந்நிறுவனங்களை அடிக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அல்லது அந்நிறுவனங்களின் அதிகாரிகளையா? அல்லது இந்த புள்ளி விவரங்களை தொகுத்து வழங்கிய மத்திய அரசு அதிகாரிகளையா? இதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை