மாநில செய்திகள்

புகார் எதிரொலி குரூப்-2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசாரணை டி.என்.பி.எஸ்.சி. தகவல் + "||" + Investigation into Group-2A Selection Abuse

புகார் எதிரொலி குரூப்-2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசாரணை டி.என்.பி.எஸ்.சி. தகவல்

புகார் எதிரொலி குரூப்-2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசாரணை டி.என்.பி.எஸ்.சி. தகவல்
தொடர்ந்து எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
சென்னை, 

குரூப்-4 பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடந்தது. இதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. முதற்கட்ட விசாரணையை தொடங்கி, தவறுகள் நடந்திருப்பதை கண்டறிந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க புகார் மனு அளித்தது.

அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் எழுந்த அதே நேரத்தில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடத்தப்பட்ட குரூப்-2ஏ தேர்விலும் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) முறைகேடு நடந்திருப்பதாக புகார் வந்தது.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெற்று, அதற்கான பணியிடங்களில் சேர்ந்து ஊதியமும் பெற்றுவிட்டனர். இதற்கிடையில் தான் இந்த புகார் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் எழுந்ததற்கு, ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து வந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

அதே காரணம் தான் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகாரிலும் முன்வைக்கப்படுகிறது. இந்த தேர்வு முடிவு தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்து இருந்தனர்.

அவர்களில் ஒருவரான மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மேலும் சந்தேகத்தை வலுவடைய செய்தது.

இந்த நிலையில் தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2ஏ தேர்வு முறைகேடு நடந்ததா? என்பது குறித்து முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறது.

குரூப்-4 பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்பே தேர்வு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குரூப்-2ஏ பதவிகளுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு பணியில் தேர்வர்கள் இருப்பதால், இதில் சற்று வித்தியாசமான முறையில் விசாரணையை டி.என்.பி.எஸ்.சி. முன்னெடுத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முறைகேடு நடந்திருப்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. உறுதி செய்த பிறகு, குரூப்-4 முறைகேட்டில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதோ? அதே நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.