மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.715 கோடி நஷ்டம் + "||" + Chennai Metro Rail Company incurred a loss of Rs 715 crore

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.715 கோடி நஷ்டம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.715 கோடி நஷ்டம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை, 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எளிதில் சென்று வர வசதியாகவும் மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்பட்டது. இதன்படி சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும் (23.1 கி.மீ.), சென்டிரலில் இருந்து புனிததோமையார்மலை (மவுண்ட்) வரையிலான 2-வது வழித்தடத்திலும் (22 கி.மீ. தூரம்), மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் முதலாவது வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த வருட மத்தியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில்களில் தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஐதராபாத், மும்பை, கொச்சி, குர்கான், டெல்லி, பெங்களூரு நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கடந்த 2018-19-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட லாபம் மற்றும் நஷ்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதன்படி சி.எம்.ஆர்.எல். எனப்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் 2018-19-ம் நிதியாண்டில் ரூ.715 கோடி நஷ்டத்தை கண்டுள்ளது. மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் தான் இழப்பு அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை மெட்ரோவில் நிகர இழப்பு என்பது செயல்பாட்டில் இருக்கும் வழித்தடம் மற்றும் செயல்படாத வழித்தடம் என இரண்டையும் உள்ளடக்கியது. 2018-19-ம் ஆண்டிற்கான சென்னை மெட்ரோவின் ஆண்டறிக்கையில் செயல்பாட்டில் இருக்கும் வழித்தடங்களில் மட்டும் ரூ.422 கோடி இழப்பை சந்திப்பதாக காட்டுகிறது. மெட்ரோ ரெயில் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.61.9 கோடியும், ‘பார்க்கிங்’ கட்டணம் மற்றும் பிற வருமானங்களில் இருந்து ரூ.24 கோடியும், வட்டி மற்றும் அரசு மானியங்களில் இருந்து ரூ.97 கோடியும் வருவாய் பெறுகிறது.

வருடாந்திர அறிக்கையின்படி, செயல்படும் வழித்தடங்களில் டிக்கெட் விற்பனை, ‘பார்க்கிங்’ கட்டணம் மூலம் வருமானம் முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இயக்க செலவுகள், தேய்மானம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் போன்ற செலவுகளும் அதிகரித்துள்ளது.

மெட்ரோ ரெயில் வருவாயை அதிகரிக்க, ரெயில் நிலையங்களை எளிதில் அணுகும்படியாக பிற போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பது, நடைபாதை வசதிகள் அமைப்பது, ஏழை, நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் கட்டணம் கொண்டு வருவது, விளம்பரம் போன்ற பிற வருவாய்களில் கவனம் செலுத்துதல் பயனுள்ளதாக அமையும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...