தேசிய செய்திகள்

டெல்லி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல்; காட்டி கொடுத்த முகநூல் + "||" + Jamia shooter, "Rambhakt Gopal", was on FB live moments before he fired

டெல்லி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல்; காட்டி கொடுத்த முகநூல்

டெல்லி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல்; காட்டி கொடுத்த முகநூல்
டெல்லியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் திட்டமிட்டே அதனை செயல்படுத்தியது அவரது முகநூல் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே இந்த சட்டத்திற்கு எதிராக இன்று மதியம் போராட்டம் நடந்தது.  இதனிடையே, டெல்லி ஜாமியா பகுதி சாலையில் கையில் துப்பாக்கி ஒன்றை வைத்தபடி வந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தோரை மிரட்டும் தொனியில், 'இங்கிருக்கிறது உங்கள் சுதந்திரம்' என்று கோஷமிட்டபடி நடந்து சென்றார்.  அவர் துப்பாக்கியால் சுட்டதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

அவர் ஷதாப் பரூக் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  அவர் கைகளில் ரத்தம் வழிந்தோடியது.  உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

இதனை அடுத்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  அந்த பகுதியருகே செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.

போலீசாரின் விசாரணையில், அந்நபர் உத்தர பிரதேசத்தின் ஜீவார் பகுதியை சேர்ந்த ராம்பக்த கோபால் (வயது 19) என தெரிய வந்துள்ளது.  அவர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அதனை திட்டமிட்டு பின் நடத்தியிருப்பது அவரது முகநூல் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில், என்னுடைய இறுதி பயணத்தில், என் மீது காவி உடையை போர்த்தி, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்களை எழுப்புங்கள் என தெரிவித்து உள்ளார்.

அவரது மற்றொரு மிரட்டல் பதிவில், 'ஷாகீன் பாக், விளையாட்டு முற்று பெறுகிறது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில வாரங்களாக சம்பவ பகுதிக்கு அருகே ஷாகீன் பாக் என்ற இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திரளான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று 3வது பதிவொன்றில், இந்து ஊடகம் எதுவும் போராட்ட பகுதியில் இல்லை என வருத்தத்தினை வெளிப்படுத்தும் வகையில் இடம் பெற்று உள்ளது.  இதனால் அவர் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு உள்ளார் என தெரியவந்துள்ளது.