தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பிரதமர் மோடி அறிவிப்பு + "||" + Rama Temple Building Foundation in Ayodhya: PM Modi's announcement

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பிரதமர் மோடி அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பிரதமர் மோடி அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,

இந்திய வரலாற்றில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. மத்திய அரசு, பிரத்யேக அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்துக்குள் நிறுவி அந்த அறக்கட்டளையின் உதவியோடு அயோத்தியில் கோவிலை கட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் சன்னி வக்பு வாரியத்துக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை தனியாக வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அறக்கட்டளை அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்த 3 மாத காலக்கெடு வருகிற 9-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.


இந்தநிலையில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்காக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் மோடி பேசியதாவது:-

நான் இங்கு ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க விஷயத்தை குறித்து தகவல் அளிக்க வந்துள்ளேன். இந்த விஷயம் கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் சார்ந்தது. என் உள்ளத்துக்கு நெருக்கமான இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த விஷயம் ராம ஜென்ம பூமி மற்றும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவது தொடர்பானதாகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அமைப்பது தொடர்பாக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராமர் கோவில் கட்டுவதற்கான விரிவான திட்டத்தை மந்திரிசபை தயாரித்துள்ளது.

‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து சுயாதீனமாக முடிவுகளை எடுக்கும். ராமர் கோவிலை கட்டுவதற்காக அயோத்தி வளாகத்தில் உள்ள மொத்த 67 ஏக்கர் நிலமும் இந்த அறக்கட்டளையிடம் வழங்கப்படும். உத்தரபிரதேச அரசு சன்னி வக்பு வாரிய அமைப்புக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதாக கூறி உள்ளது.

இந்திய மக்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் என்று வெவ்வேறு மதத்தினராக இருந்தாலும் அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களே. இந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும். சப்கா சாத் சப்கா விகாஸ்(அனைவரும் ஒருங்கிணைந்து இருப்பது, அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்துவது) என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்திய மக்கள் அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காண்பித்தனர். அதற்காக 130 கோடி இந்திய மக்களையும் வணங்குகிறேன் என்று அவர் பேசினார்.

முன்னதாக மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மோடி உடனடியாக நாடாளுமன்ற மக்களவைக்கு சென்றார். அப்போது அவர் காவி நிற துண்டை தோளில் அணிந்து கொண்டு அவைக்கு வருவதை பார்த்த பா.ஜனதா எம்.பிக்கள் உற்சாகம் அடைந்தனர்.

மேலும் ராமர்கோவில் அறக்கட்டளை அமைக்க உள்ள தகவலை அவர் கூறியவுடன் பெரும்பாலான எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டும், மேஜைகளை வேகமாக தட்டியும் அறிவிப்பை வரவேற்றனர். குறிப்பாக இந்த அறிவிப்பை கேட்டவுடன், விலங்குகள் நலத்துறை மந்திரி கிரிராஜ்சிங், தொழில் மற்றும் திறன்மேம்பாட்டு துறை மந்திரி மகேந்திரநாத் பாண்டே, அயோத்தி தொகுதி எம்.பி. லல்லு சிங் ஆகியோர் இரு கைகளையும் உயர்த்தி ஆமோதித்தனர்.

இந்தநிலையில், ராமர் கோவில் கட்டுவதற்காக அமைய உள்ள அறக்கட்டளையில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் உள்பட 15 அறங்காவலர்கள் இருப்பார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்த தனது டுவிட்டர் பக்கத்தில், “ஸ்ரீ ராம ஜென்மபூமி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் இருப்பார்கள், அதில் ஒரு அறங்காவலர் எப்போதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார். சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். கடவுள் ராமரை அவரது பிறந்த இடத்தில் அமைய உள்ள பிரமாண்டமான கோவிலில் அனைவரும் காண முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் களைகட்டிய தீப உற்சவம் மிகப்பெரிய வெற்றி - யோகி ஆதித்யநாத் பெருமிதம்
அயோத்தி நகரில் நடந்த தீப உற்சவ நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
2. அயோத்தியில் களை கட்டிய தீபாவளி- சரயு நதிக்கரையில் 5 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
3. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு: அத்வானி வழக்கில் தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்க ஒரு மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு - 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. முதல்-மந்திரிக்கு எடியூரப்பா கடிதம்
அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரும்படி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
5. அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.