மாநில செய்திகள்

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை + "||" + Rs 1.62 crore fraud case: Ex-minister Senthil Balaji raids house

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
சென்னை, 

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 - 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 

அந்த புகாரில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்யப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு பரிந்துரையின் பேரில் போலீசார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜி, பாஸ்கர் கேசவன் உள்பட 12 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்பட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடி வழக்கு எந்தவித முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில்பாலாஜி மற்றும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. எனவே உரிய முறையில் விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். 6 மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கத்தில் உள்ள சர்வேச அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் செந்தில்பாலாஜி வீட்டுக்கு கடந்த வாரம் சீல் வைத்தனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் தனது வீட்டில் சோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் செந்தில்பாலாஜி வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது செந்தில்பாலாஜி வக்கீல்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி வீட்டில் இல்லை. சோதனை நடவடிக்கை நேற்று மாலையிலும் நீடித்தது.

மதிய உணவை கூட போலீசார் வெளியில் இருந்து வாங்கி செந்தில்பாலாஜி வீட்டிலேயே சாப்பிட்டனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும், சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோசடி வழக்கு; சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆசம் கான், மனைவி, மகனுக்கு சிறை தண்டனை
மோசடி வழக்கொன்றில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகன் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2. ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசில் ஆஜர்
ரூ.1.62 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.