தேசிய செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி. திருத்த சட்டம் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு + "||" + S.C., S.T. Amendment Act Supreme Court decision

எஸ்.சி., எஸ்.டி. திருத்த சட்டம் செல்லும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

எஸ்.சி., எஸ்.டி. திருத்த சட்டம் செல்லும்  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி. திருத்த சட்டம் செல்லுபடியாகும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி, 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கு மூத்த போலீஸ் அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும், அந்த புகார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வருமா? என்பது குறித்து டி.எஸ்.பி. மூலம் முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இது வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் செயல் என கூறி இந்த உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

சட்டத்தில் திருத்தம்

இதைத்தொடர்ந்து எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. ‘எஸ்.சி., எஸ்.டி. (வன்கொடுமை தடுப்பு) திருத்த சட்டம்-2018’ என்ற இந்த சட்டம் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கு மூத்த போலீஸ் அதிகாரியின் ஒப்புதல் தேவையில்லை. மேலும் வழக்கு பதிவு செய்வதற்கு முதற்கட்ட விசாரணை அவசியம் இல்லை என்பதுடன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் நபர் முன்ஜாமீன் பெறவும் முடியாது என்பதும் இந்த சட்டத்தின் சாராம்சம் ஆகும்.

அதிகாரி ஒப்புதல் வேண்டாம்

மத்திய அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி. திருத்த சட்டம் செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய முதற்கட்ட விசாரணை தேவையில்லை எனவும், இந்த வழக்கில் ஒருவரை கைது செய்ய மூத்த போலீஸ் அதிகாரியின் ஒப்புதல் தேவையில்லை எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

சாதியற்ற சமூகம்

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் இல்லாவிட்டால் மட்டுமே அவருக்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கும் என கூறிய நீதிபதிகள், அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக முகாந்திரம் இல்லை என்றால் வழக்கையே கோர்ட்டால் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் கூறினர்.

ஒவ்வொரு குடிமகனும் சக குடிமகனை சமமாக பாவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி ரவீந்திர பட், இந்த சட்டத்தை வலிமையாக அமல்படுத்தாவிட்டால் சாதியற்ற சமூகம் என்ற கனவு கானல் நீராகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...