உலக செய்திகள்

ஹபீஸ் சயீதுக்கு தண்டனை; பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு + "||" + Conviction of Hafiz Saeed an important step towards holding LeT accountable: US

ஹபீஸ் சயீதுக்கு தண்டனை; பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு

ஹபீஸ் சயீதுக்கு தண்டனை; பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு
ஹபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை வழங்கிய பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ச்சியாக 12 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டது.  இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.

கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதனிடையே மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்று கூறியது. மேலும், கூடுதல் ஆதாரம் வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் அலைக்கழித்தது. மேலும் அந்நாட்டிலே ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தான் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானின் இந்த முடிவை அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது.  இதுபற்றி தெற்கு மற்றும் மத்திய ஆசிய வெளியுறவு துறை உதவி மந்திரி (பொறுப்பு) அலைஸ் ஜி. வெல்ஸ் கூறும்பொழுது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு அதன் குற்றங்களுக்கு பொறுப்பேற்க செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதனை நிறுத்தும் சர்வதேச முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது ஆகியவற்றை வரவேற்கிறோம்.  ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிக்கு சிறை தண்டனை விதித்திருப்பது ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கை என்று தெரிவித்து உள்ளார்.

ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்காக 23 வழக்குகள் உள்ளன.  முன்னதாக 2017 ஆம் ஆண்டில், ஹபீஸ் சயீத் மற்றும் அவருடைய 4 உதவியாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் பயங்கரவாத சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.