மாநில செய்திகள்

அணிவகுக்கும் பல்வேறு புகார்கள்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + TNPSC and Teacher exam Scandal Report MK Stalin's urging to investigate

அணிவகுக்கும் பல்வேறு புகார்கள்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அணிவகுக்கும் பல்வேறு புகார்கள்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குருப்-1, குருப் -2ஏ தொடங்கி கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு வரை நடைபெற்றுள்ள அனைத்து முறைகேடுகள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள்.

அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடுகள்-முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதாக முதல்வரிடமே தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர். அணிவகுக்கும் பல்வேறு புகார்களை சிபிஐ விசாரிக்க தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.