பட்ஜெட்

தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும் + "||" + Budget: Public Reception and Opposition

தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும்

தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் பட்ஜெட்டை வரவேற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.
சென்னை, 

அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு பெண்கள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. அதேநேரம் பட்ஜெட்டில் வேலை வாய்ப்புக்கு திட்டம் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, புதிய திட்டங்கள் என ஏராளமான அறிவிப்புகள் இருந்தன. இந்த பட்ஜெட்டின் தாக்கம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து பொதுமக்கள் சிலரிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

மீனவர் பாரதி

கடந்த ஆண்டை விட மீன்வளத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மீன்பிடி தடைக்காலத்தின்போது வழங்கப்படும் நிவாரண நிதி இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு குடும்பங்கள் பயனடையும். இதைப்போல் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக் குப்பத்தில் புதிதாக 2 மீன்பிடி துறைமுகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மீன் அங்காடிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. மேலும் மின்சார வாகனங்களுக்கு நிதி ஒதுக்கியது, உள்கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி, நீர்நிலைகள் பராமரிப்புக்கான நிதி என இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது பாராட்டக்குறியது.

தனியார் நிறுவன ஊழியர் சரண்யா

இந்த பட்ஜெட்டில் மகளிர் நலனுக்கு தனியாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. பெண்கள் கூடுதல் பாதுகாப்புக்காக பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே நிறைவேற்ற வேண்டும். இந்த பட்ஜெட்டில் புதிய அணைகள் குறித்த அறிவிப்பு, விவசாய கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. விவசாயத்துக்கும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்களோ, அறிவிப்புகளோ எதுவும் இல்லை. வேலை வாய்ப்புகளுக்கான சிறப்பு திட்டங்கள் இல்லாதது பெரிதும் ஏமாற்றமாக உள்ளது.

சமூக நல ஆர்வலர் எஸ்.கே.காயத்ரி

பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு நிர்பயா திட்டத்தின்மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாகும். பஸ்களில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடிக்க இது உதவும். அதுபோல ஸ்மார்ட் கார்டு வைத்திருப்போர் மாநிலத்தில் எந்தவொரு ரேஷன் கடையிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிடலாம் என்று அறிவித்திருப்பதும் நல்ல விஷயமாகும். அதேபோல விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது நிச்சயம் வரவேற்புக்குரிய பட்ஜெட் தான்.

ஓட்டல் உரிமையாளர் வெள்ளைசாமி

இந்த பட்ஜெட்டில் விவசாயம், நீர் மேலாண்மை பணிகளுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் நலத்திட்டம் மற்றும் பாதுகாப்புக்கு தனியாக நிதி ஒதுக்கியுள்ளது பாராட்டத்தக்கது. உணவு பொருட்கள் பதப்படுத்துவதால் விலைவாசிகள் குறைய வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உணவு பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகைகள் என மொத்தத்தில் சாமானியர்கள், ஏழைகள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

குடும்பத் தலைவி ஆனந்தி பிரபா

இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள், ஏழை எளியவர்களுக்கு பயன் பெரும் விதமாகவும், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பல்வேறு நல்ல அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மேலாண்மை, ஏரி, குளம் பாதுகாப்பது மற்றும் புனரமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பஸ்களில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பெண்களுக்கு பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் நிர்பயா நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் மாணவர்கள், இளைஞர்கள், புதிதாக தொழில் முனைவோர் என அனைவருக்கும் நீண்டகால பயன் அளிப்பதாக உள்ளது.

மந்தவெளியை சேர்ந்த இளம்பெண் கரோலின்

மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிக்க 16 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் விதமாக நிலுவையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மாற்றுத்திறனாளிகள் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

பெண்கள் நலன், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், அம்மா உணவக திட்டம், நீர்பாசன திட்டம், தீயணைப்பு துறை போன்றவற்றிற்கும் நிதி அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறதும் வரவேற்கத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசார் வார விடுமுறை அறிவிப்புக்கு சரத்குமார் வரவேற்பு
போலீசார் வார விடுமுறை அறிவிப்புக்கு சரத்குமார் வரவேற்பு.
2. தமிழக காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரவேற்பு
தமிழக காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு
சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது; கமல்ஹாசன் வரவேற்பு.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
5. இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.