மாநில செய்திகள்

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் + "||" + 3 killed in Indian-II shooting: CBCID Transition to inquiry

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
பூந்தமல்லியில் இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி, 

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில், கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

காயமடைந்தவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். ஒரு சிலர் மட்டும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த இடத்திற்கு சென்று நசரத்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 தரப்பினர் மீதும் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்தசம்பவம் குறித்து, நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் மற்றும் காயம் அடைந்தவர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை செய்ய நசரத்பேட்டை போலீசார் முடிவு செய்து இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ‘வாய்ஸ் ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பின் தலைவர் வக்கீல் ராஜசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து நசரத்பேட்டை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி ‘நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர், அந்த படத்தை தயாரிக்கும் ‘லைக்கா’ நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.