மாநில செய்திகள்

திருச்செந்தூரில் பிரமாண்ட விழா மணிமண்டபத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு புகழாரம் ‘பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்’ + "||" + A grand ceremony in Thiruchendur Edapady Palanisamy opened Tribute to Dr. B. Sivanthi Adithanar

திருச்செந்தூரில் பிரமாண்ட விழா மணிமண்டபத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு புகழாரம் ‘பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்’

திருச்செந்தூரில் பிரமாண்ட விழா மணிமண்டபத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு புகழாரம் ‘பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்’
திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பா.சிவந்தி ஆதித்தனார் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
திருச்செந்தூர்,

தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும், ஆன்மிகம், கல்வி, விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.


இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழா நேற்று காலை பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 8 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

பின்னர், அங்கிருந்து விழா நடைபெறும் திருச்செந்தூருக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். வழிநெடுக அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முற்பகல் 11.20 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபம் இருக்கும் பகுதியை வந்து அடைந்தார். அங்கு அவரை தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னதாக, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அவருடன் மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, முற்பகல் 11.23 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார். பின்னர், மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ள அவரது சிலையையும் திறந்துவைத்தார். அதன்பிறகு, அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அதன்பிறகு விழா மேடைக்கு காலை 11.40 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். அதன்பிறகு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் வைக்கப்பட இருக்கும் கல்வெட்டுகளை திறந்துவைத்தார்.

பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.260 கோடியே 6 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள 47 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

அதன்பின்னர், ஸ்ரீவைகுண் டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சர்கள் க.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். அதன்பிறகு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, தொழில் முதலான பல்வேறு துறைகளில் இந்திய துணை கண்டத்தில் பெரும் சாதனையாளராக திகழ்ந்து விளங்கும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரை போற்றிடும் வகையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை திறந்து வைப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப்போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் சாதனைகள், தன்னலமற்ற தொண்டுகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர்தான் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

நாட்டுக்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை உருவாக்கி சிறப்பு செய்து, மக்களின் உள்ளங்களில் உயர்ந்து நிற்பவர் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா.

அவர் காட்டிய வழியில் இந்த அரசு கடந்த 9 ஆண்டுகளில் 20 நினைவகங்கள், 4 தலைவர்களுக்கு முழு திருவுருவச்சிலை, ஒரு நினைவுச்சின்னம், 2 நினைவு வளைவுகள் ஆகியவற்றை திறந்து வைத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் உன்னத தலைவர்களின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக 47 தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும், 11 தியாகச்சீலர்களுக்கு நினைவகங்கள் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சி.பா.ஆதித்தனார்- கோவிந்தம்மாள் தம்பதியருக்கு 2-வது மகனாக 1936-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி பிறந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். பள்ளிக்கல்வியை சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்து, பின்னர் மாநில கல்லூரியில் படிப்பை தொடர்ந்து பட்டம் பெற்றார்.

கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படை என்.சி.சி.யில் தளபதியாக இருந்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரி என்.சி.சி. படைகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

சி.பா.ஆதித்தனார், படிக்காத பாமரனும் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் 15.10.1942 அன்று முதன் முதலாக மதுரையில், அன்றைய செய்தியை அன்றே படியுங்கள் என்ற முழக்கத்துடன் ‘தந்தி’ என்ற பெயரில் நாளிதழ் ஒன்றை தொடங்கினார்.

பின்னர் அதையே சென்னையில் ‘தினத்தந்தி’ என்ற பெயரில் தொடங்கினார். இதன் மூலம் தமிழகத்தில் பத்திரிகையை படிக்கும் பழக்கம் அதிகரித்தது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.

அதுபோல, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் படிக்கும்போது, ‘தினத்தந்தி’யில் வெளியிடப்பட்ட சிரிப்பு துணுக்கு ஒன்றை தனது தந்தையிடம் கொடுத்தார். அந்த சிரிப்பு துணுக்கு என்னவென்றால், “ஆசிரியர் மாணவரிடம் கேட்கிறார். பாம்பு என்று எழுதச்சொன்னால் பம்பு என்று எழுதியிருக்கிறாயே என்று. அதற்கு மாணவன் பாம்புக்குத்தான் கால் கிடையாதே சார் என்று பதிலளித்தான்” என்று இருந்தது.

தன் மகனின் பத்திரிகை ஆர்வத்தை உணர்ந்த சி.பா.ஆதித்தனார், பத்திரிகை தொழிலில் அவரை தனது வாரிசாக உருவாக்கினார். 1958-ம் ஆண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தனது படிப்பை முடித்ததும் அவரை அழைத்து பத்திரிகை துறையில் பயிற்சி அளித்தார்.

“பாலூட்டும் அன்னை, அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை, நல் வழிகாட்டும் தலைவன்” என்ற எம்.ஜி.ஆரின் பாடலுக்கு ஏற்ப டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அவரது தந்தையார் பயிற்சி அளித்தார். அச்சு கோர்ப்பவராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புவராக, நிருபராக, துணை ஆசிரியராக என்று பத்திரிகை துறையின் அத்தனை அம்சங்களிலும் அவருக்கு பயிற்சி அளித்தார்.

பின்னர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நெல்லைக்கு சென்று மாலை முரசு பத்திரிகையை தொடங்கினார். அவரது அயராத உழைப்பினால் மாலை முரசு பத்திரிகை நெல்லை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இதன் எதிரொலியாக மற்ற மாவட்டங்களிலும் மாலை முரசு தோன்றியது.

பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத்தேர்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய பணியை கண்ட அவரது தந்தையார் ‘தினத்தந்தி’யின் நிர்வாக பொறுப்பை அவரிடம் 1959-ம் ஆண்டு ஒப்படைத்தார். அந்த நேரத்தில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் இருந்து மட்டுமே ‘தினத்தந்தி’ வெளிவந்து கொண்டிருந்தது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நிர்வாக திறமையால், ‘தினத்தந்தி’ நாளுக்கு நாள் வளர்ந்து இப்போது பெங்களூரு, மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் இருந்து பதிப்பாகி வெற்றிகரமாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்றால் அது மிகையாகாது.

‘தினத்தந்தி’யின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, அண்ணா தலைமையுரை ஆற்றினார்.

அப்போது அவர், “ஒரு அமைப்பை தோற்றுவிப்பது என்பது கடினம். ஆனால் நல்லமுறையில் அமைத்த ஒரு அமைப்பினை யாரிடத்தில் ஒப்படைக்கிறோமோ அவர்கள் அதில் ஒரு துளிகூட அக்கறை காட்டவில்லை என்றால் எவ்வளவு திறமையாக அந்த அமைப்பு அமைந்திருந்தாலும் வெகுவிரைவிலேயே அது கலைந்துவிடக் கூடிய ஆபத்து உண்டு. அந்த விதமாக நில்லாமல் சி.பா.ஆதித்தனார் அமைத்துக் கொடுத்த ‘தினத்தந்தி’ நல்ல முறையில் இன்னும் நல்ல வளர்ச்சி அடையத் தக்க வகையில் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் தன்மையிலேயே இன்றையதினம் தினத்தந்தி நடக்கிறது என்றால், அதன் நிர்வாகத்தை ஏற்று நடத்திக்கொண்டிருக்கும் சி.பா.ஆதித்தனாரின் திருமகன் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு உரிய பங்கு உண்டு. சி.பா.ஆதித்தனார் நல்ல அமைப்பை ஏற்படுத்திக்கொடுத்தது மட்டுமல்லாமல், அதை தொடர்ந்து நடத்த தக்க பிள்ளையையும் பெற்றெடுத்தார் என்பது அவரின் தனிச்சிறப்புக்கான எடுத்துக்காட்டாகும்” என்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரை பாராட்டி பேசினார்.

இன்று ‘தினத்தந்தி’ பத்திரிகை பல கோடி வாசகர்களுடன் நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை நினைத்துப்பார்த்தால் அண்ணா கூறியது நூற்றுக்கு நூறு சரியாக இருப்பதை உணர முடிகிறது.

‘சி.பா.ஆதித்தனார் அமைத்த நிறுவனத்தை அவரது மகன் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் கட்டிக்காத்து வருவதுடன் மெச்சத்தகுந்த வழியில் நடத்தி வருகிறார்’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

‘தினத்தந்தி’ நாளிதழ் மூலம் பாமரனும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். இவர் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். எனது முந்தைய ஆட்சி காலத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் எளிமையானவர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர்” என்று மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

‘தினத்தந்தி’ பத்திரிகை மட்டுமின்றி, 1962-ம் ஆண்டு ராணி வார இதழ் தொடங்கப்பட்டது. சி.பா.ஆதித்தனார் பாமர மக்களை நாளிதழை படிக்கவைத்தார் என்றால், பட்டிதொட்டி மக்களிடம் வார இதழ் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி தந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

இதைத்தொடர்ந்து ராணி முத்து, ராணி காமிக்ஸ் ஆகிய இதழ்களையும் தொடங்கினார். இன்று தமிழக மக்களின் வீடுகளை அழகுபடுத்திக்கொண்டிருக்கும் ராணி முத்து காலண்டரை வெளியிட்டவரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

இவர் திருச்செந்தூர் பகுதியில் பல கல்வி நிறுவனங்களை நிறுவி அந்த பகுதியில் உள்ள ஏழை மக்கள் கல்வி கற்க வழிவகை செய்தவர். ஏழைகளும் படிக்க வேண்டும், அப்போதுதான் நாடும் சமுதாயமும் முன்னேற முடியும், படிக்க எந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையோ அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தவும் செய்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் புதிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக வெகுமதி அளித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சதுரஅடி பரப்பில் சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு மண்டபம் கட்டிக்கொடுத்தவரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்தான்.

ஏழை, எளியவர்களுக்காக சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது திருச்சி பாப்பாக்குறிச்சியில் தனது தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவு கூடத்தை கட்டிக்கொடுத்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளர்ச்சியில் காட்டிய அதே அக்கறையை விளையாட்டுத் துறை வளர்ச்சியிலும் காட்டினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்த அவர் 1987-ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆசிய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்த அவர், ஆசிய ஒலிம்பிக் சங்கம், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பல விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2 ஆயிரமாவது ஆண்டு நவம்பர் 3-ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர் 1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலே டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரை சென்னை நகர ஷெரீப் ஆக நியமித்து கவுரவப்படுத்தினார். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக 2008-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது.

இவருக்கு பல்வேறு பல் கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் தொண்டினை வருங்கால சமுதாயத்தினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அன்னாருக்கு வரலாற்றில் நீங்கா இடம் கிடைத்திடும் வகையிலும், அவரின் பெருமைக்கும், புகழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் அரசு சார்பாக மணிமண்டபம் அமைக் கப்படும் என்று 22.11.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவித்தேன்.

அதனை செயல்படுத்தும் விதமாக, ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் அமைக்க 10.10.2018 அன்று அடிக்கல் நாட்டினேன். இந்த மணிமண்டபத்தை அமைக்கும் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, இன்று திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் 8 அடி பாய்ந்தால், அவர் மகன் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் 16 அடி அல்ல, 32 அடி பாய்ந்து, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை செய்தவுடன், அடிக்கல் நாட்டு விழாவில் இருந்து, மணிமண்டபம் திறப்பு விழாவான இன்று வரை முழு ஈடுபாட்டுடன் இதை வெற்றிகரமாக நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பை நல்கினார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

தன் தாத்தா சி.பா.ஆதித்தனார், தந்தை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவாக்கிய தினத்தந்தியை மேலும் வளர்த்து இன்று துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பதிப்பு என்ற பெருமையையும் ‘தினத்தந்தி’ குழுமத்துக்கு பெற்று தந்துள்ளார்.

நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், பாலசுப்பிரமணியனின் தாத்தா ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிறந்த பத்திரிகையாளர் என்று, அவர் தந்தை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சிறந்த நிர்வாகி என்று, ஆனால் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தன் தாத்தா, தகப்பனாரின் கலவையாக சிறந்த பத்திரிகையாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார்.

இதற்கு அவரது நிர்வாகத்தில் இயங்கும் ‘தினத்தந்தி’, ‘டி.டி. நெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகை, மாலை மலர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம்., மற்றும் சில வார, மாத இதழ்களே சாட்சி. இப்போது தன் மகன்களான சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் ஆகியோருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். அந்த இளைஞர்களும் தன் பூட்டனார், தாத்தா, தந்தை போல பத்திரிகை துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரந்து விரிந்து தொழில் செய்யக்கூடிய ஒரு சமுதாயம் என்று சொன்னால் அது நாடார் சமுதாயம்தான். எந்த மூலைக்கு சென்றாலும், உழைக்க பிறந்தவர்கள்.

பா.சிவந்தி ஆதித்தனார் செய்த சாதனைகள் இன்றைக்கும் மண்ணிலே நிலைத்து நிற்கின்றன. ஆகவேதான், இந்த விழாவுக்கு அரங்கமே நிரம்பி கடல் போல் மக்கள் வெள்ளம் காட்சி அளிக்கின்றது. ஒருவர் மறைந்ததற்கு பிறகு அவருக்கு செய்கின்ற புகழ் தான் அவர் செய்த சாதனைகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரிசை இங்கே அமர்ந்திருக்கின்ற மக்கள் வழங்கி கொண்டு இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, இன்றைக்கு நல்லவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், அவர்கள் வாழ்ந்த காலத்திலே செய்த சாதனைகள், அந்த சாதனைகளுக்கு இன்றைக்கு இயற்கை அன்னையே மழை பொழிந்து வாழ்த்திக் கொண்டு இருக்கின்ற காட்சியை பார்க்கிறோம்.

என்னுடைய தொகுதிகளிலும் நாடார் சமுதாயத்தினர் அதிகமாக இருக்கின்றனர். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலே என்னுடைய நண்பர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாதேஷ் இரண்டு முறை எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக பதவி வகித்தார். இப்போதும் அவரது மனைவி எம்.குப்பம்மாள் எடப்பாடி ஒன்றிய சேர்மனாக பதவி வகிக்கிறார்.

இன்றைக்கு அ.தி.மு.க.வுக்கு இந்த சமுதாய மக்கள் பேராதரவை அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களிலும், அவர்கள் மறைந்த பிறகும் நாங்கள் இப்போது இயக்கத்தில் இருக்கிற போதும் சரி, எங்களோடு துணை நின்றவர்கள், நிற்பவர்கள் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்குகொள்வதில் நாங்கள் பெருமையாக கருதுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் கடம்பூர் ராஜூ முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். இருவருக்கும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுப்பரிசு வழங்கி, நன்றியுரை ஆற்றினார்.

விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, டாக்டர் விஜயபாஸ்கர், ராஜலட்சுமி, நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சங்கர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், எம்.பி.க்கள் எச்.வசந்தகுமார், முத்து கருப்பன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோசம், வைகுண்டராஜன், எம்.எல்.ஏ.க்கள் முகமது அபுபக்கர், நாராயணன், ஐ.எஸ்.இன்பதுரை உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. திருச்செந்தூரில் போலீசார் அனுமதி மறுத்ததால் இஸ்லாமியர் வீட்டில் நடந்த விநாயகர் சிலை வழிபாடு - மும்மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று குறிஞ்சிநகர் கலையரங்கில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முயற்சி மேற்கொண்டனர். திருச்செந்தூர் போலீசார் அங்கு சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
3. திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.