தேசிய செய்திகள்

இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து + "||" + Between India and the United States Rs. 21,000 crore military deal: Signature in the presence of Trump-Modi

இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து

இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து
இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.

டெல்லியில் நேற்று காலை 11 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த டிரம்பை பிரதமர் மோடி வரவேற்றார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருகை தந்ததற்கு டிரம்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.


அதற்கு டிரம்ப், “இந்தியாவில் கடந்த 2 நாட்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியங்களை அளித்துள்ளது. குறிப்பாக ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்வு” என கூறினார்.

தொடர்ந்து டிரம்ப் கூறும்போது, “இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம். அந்த மைதானத்துக்குள் கூடியிருந்த 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் எனக்காக அல்ல, உங்களுக்காகத்தான் (மோடி) கூடியதாக நான் கற்பனை செய்துகொள்கிறேன். நான் உங்களது பெயரை (மோடி) கூறியபோதெல்லாம், அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டிரம்ப், பிரதமர் மோடியுடன் இருதரப்பு தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, ராணுவ விவகாரங்கள், வர்த்தக பிரச்சினைகள், பயங்கரவாத தடுப்பு, எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றன.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு ராணுவ ஒப்பந்தம் டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ராணுவ ஒப்பந்தம் ரூ.21 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலானது.

இதன்படி இந்தியாவுக்கு, உலகிலேயே தலைசிறந்தவை என டிரம்பினால் கருதப்படுகிற எம்.எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் (24 எண்ணிக்கை), ஏ.எச்-64 இ அபாச்சி ஹெலிகாப்டர்கள் (6 எண்ணிக்கை) ஆகியவற்றை அமெரிக்கா வழங்கும்.

இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு தரப்பிலும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆயின.

* மனநலம் தொடர்பாக இருதரப்பு சுகாதார துறைகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம்.

* மருத்துவ பொருட்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்புக்கும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.), எக்ஸான் மொபில் இந்தியா எல்.என்.ஜி. நிறுவனம் ஆகியவற்றுக்கும் அமெரிக்காவின் சார்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, “இரு நாடுகளும் தங்களது நாட்டின் மக்களை மத அடிப்படையிலான பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதை உறுதிசெய்து கொண்டுள்ளன” என கூறினார்.

அதைத்தொடர்ந்து டிரம்ப் கூறியதாவது:-

பயங்கரவாத தடுப்பு முயற்சியைப் பொறுத்தவரையில், பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படுகிற பயங்கரவாதிகளை ஒடுக்கச்செய்வதில் அமெரிக்கா ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறது.

இந்தியாவுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.21 ஆயிரத்து 600 கோடி) மேம்படுத்தப்பட்ட அமெரிக்க ராணுவ தளவாடங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்து நாங்கள் இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி உள்ளோம். இதில் அபாச்சி மற்றும் எம்.எச்.-60 ரோமியோ ஹெலிகாப்டர்களும் அடங்கும். இவை உலகிலேயே மிகச்சிறந்தவை ஆகும்.

இந்த ஒப்பந்தங்கள் எங்கள் கூட்டு பாதுகாப்புத்திறனை மேம்படுத்தும். இன்னொரு பக்கம் எங்கள் ராணுவம், அவற்றை இயக்குவதற்கான பயிற்சியையும் தொடர்கிறது.

எங்கள் பேச்சுவார்தையில் கவனம் செலுத்தப்பட்ட இன்னொரு முக்கிய அம்சம், இருதரப்பு பொருளாதார உறவு சார்ந்தது. இந்த உறவை பொறுத்தமட்டில் அது, நேர்மையானதாகவும், பரஸ்பரமானதாகவும் இருக்க வேண்டும்.

விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக எங்கள் குழுவினர் மகத்தான முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வோம் என்று நான் நம்புகிறேன். நான் ஜனாதிபதி பதவியை ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான ஏற்றுமதி 60 சதவீதம் அதிகரித்துள்ளது. உயர்தர அமெரிக்க எரிசக்தி ஏற்றுமதி 500 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதத்தில், ‘அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி ஒத்துழைப்பு’ இங்கு ஒரு நிரந்தர இருப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இடையேயான ‘குவாட்’ முன் முயற்சியை புதுப்பிக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம். (இது ராணுவம் சார்ந்த 4 தரப்பு பேச்சுவார்த்தை ஆகும்.)

இந்தியாவுடனான கூட்டை நாங்கள் வலுப்படுத்துகிறோம். அத்துடன் நமது இரு நாடுகளும் ஜனநாயக மரபுகள், தனிமனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் ஜனநாயக ரீதியிலும், அரசியல் சாசனங்களின் அடிப்படையிலும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹர்சவர்தன் சிறிங்கலா நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “போதைப்பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்கும், உள்நாட்டு பாதுகாப்பின் தரத்தை உயர்த்தவும் பணி குழுக்களை நியமிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு துறையில் கொள்முதல், தொழில்நுட்பம், ராணுவ துறையில் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உயர்முக்கியத்துவம் அளிக்க பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி அளித்துள்ளார். ஒப்பந்தங்களை செய்து கொள்வது தொடர்பாக அவரும், பிரதமர் மோடியும் 5 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்” என கூறியது குறிப்பிடத்தகுந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்பு
17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா வைரஸ்:தும்மல்,இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது
கொரோனா வைரசானது பாதிக்கபட்டவரின் தும்மல்,இருமல் மட்டுமல்லாமல் அவரது மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்கியது - தூதரக அதிகாரி
நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.