மாநில செய்திகள்

‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி + "||" + Rajinikanth and I are talking about the development of Tamil Nadu - Interview with Kamal Haasan

‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி

‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை, 

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி முழுவீச்சில் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தல் அறிக்கைக்கான முன்னோட்டமாக ‘தமிழகத்தை புனரமைப்போம்-எதிர்காலத்துக்கான பாதை’ என்ற தலைப்பிலான செயல்திட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

அதில், விவசாயிகள் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, புரட்சிகரமான பொருளாதார திட்டம், ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.72 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது, மாணவர்கள் நலன், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், மீனவர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதையடுத்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தல் அறிக்கைக்கு முன்னோட்டமாக இந்த செயல் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறோம். விமர்சனங்கள் எழுந்தால் திருத்திக் கொள்வதற்கு எங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். 2021 சட்டசபை தேர்தலுக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது? என்று வாக்காளர்கள் எண்ணிக்கொண்டு இருப்பது போல, நாங்களும் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் குறிப்பிட்டதுபோல, ஊழலை ஒழித்துவிட்டாலே 40 சதவீத திட்டங்களை நிறைவேற்றிவிடலாம்.

எங்களுடைய கட்சியில் தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தொண்டர்கள் மத்தியிலேயே தலைவர்களை உருவாக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. என்னுடன் என் கட்சி முடியவேண்டும் என்று நினைப்பது தலைமை கிடையாது.

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டுமா? அல்லது தனித்து போட்டியிடவேண்டுமா? என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தை மாற்றவேண்டும் என்ற முனைப்பு பல வாக்காளர்களிடம் இருக்கிறது. நேர்மையாக மாற்ற நினைத்தாலும், பணம் கொடுத்து சிலர் கவிழ்த்துவிடுவார்கள் என்ற குழப்பமும் அவர்களிடம் இருக்கிறது. தமிழகத்தை முனைப்போடு மாற்றக்கூடிய தலைமை எங்களிடம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். வருங்காலத்தில் என்னுடைய தலைமையில் ஒரு அணி உருவானால், அதனை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று மற்ற கட்சிகள் முடிவு செய்யும்.

கூட்டணி அமையும்போது எங்கள் தரப்பில் இருந்து முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முன்மொழிவோம். அதே சமயத்தில் அவர்களுக்கும் தனி மரியாதை கொடுக்கவேண்டும். இதை பின்னர் விவாதித்து தான் சொல்லமுடியும். எங்கள் கட்சிக்கு, மக்கள் உடனான அற்புத கூட்டணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதற்கான பதில் வருங்காலத்தில் கிடைக்கும். மக்கள் அதற்கான நல்ல பதிலை கொடுப்பார்கள். மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.

மாற்றத்துக்கான தலைமை, நேர்மையான தலைமை, தைரியமான தலைமை, புத்துணர்ச்சியான தலைமை உள்ளிட்ட பண்புகள் உடைய முதல்-அமைச்சர் வேட்பாளர்கள் வேறு யாரும் இல்லை என்று நான் கருதுகிறேன். என் பார்வையில் தமிழனாக எனக்கு தென்படவில்லை. யாரும் கோபப்படவேண்டியது இல்லை. ரஜினிகாந்தும், நானும் தமிழகத்தின் மேம்பாடு குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம். அதில் கொள்கை ரீதியாக மாறுதல் இருக்கலாம் என்று பரவலாக பேச்சு வருகிறது.

ஆனால் இப்போது அவர் (ரஜினிகாந்த்) சொல்லிக்கொண்டு இருக்கும் விஷயங்கள் சற்றே மாறுபட்ட தமிழகத்தின், தேசத்தின் நலன் நோக்கிய அணி சாராத நிலை இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஏற்கனவே தேவைப்பட்டால் இணைவோம் என்று கூறியிருக்கிறோம். நல்ல எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை நாங்கள் நடத்தவேண்டும். அதற்காக யார், யாரெல்லாம் நேர்மையை நோக்கி நகர துணிகிறார்களோ, அவர்களுடன் ஒன்று சேருவோம். தமிழகத்தை முன்னேற்றுவதுதான் எனது லட்சியம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் (கமல்ஹாசன்) தலைமையில் 3-வது அணி உருவானால், தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட திராவிட வாக்கு வங்கிகளை உடைத்து வெற்றி பெற முடியுமா?

பதில்:- சரித்திரத்தில் சின்ன இடமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள விஷயங்களில் தான் நான் முனைப்புடன் செயல்படுவேன். நான் பெரிதாக மதிக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருந்த திரைத்துறையில் இன்னொரு ஆள் வருவதற்கு இடம் இல்லை தம்பி, சின்ன, சின்ன வேஷங்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர் கள் இருக்கும்போதே, அவர்களுடைய ஆசியுடன் அந்த இடத்தை கைப்பற்றியவர்கள் நாங்கள். அவர்களுடைய ஆசியுடன், போட்டியாளர்களாக அல்ல. அந்த தலைமை அரசியலிலும் இப்போது இருக்கிறது என்று நம்புகிறேன்.

கேள்வி:- வாக்காளர்கள் பணம் வாங்குவதை நிறுத்தும் வரை இந்த மாற்றம் நிகழும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- வாக்காளர்கள் திருந்த வேண்டும் என்றால், அந்த தவறை தொடங்கியவர்கள் அவர்கள் என்று அல்லவா அர்த்தம். வாக்காளர்களை எப்படி கெடுத்தோமா, அதேபோன்று திருத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி:- மக்கள் நீதி மய்யத்தை கிராமங்களில் கொண்டு சேர்ப்பதற்கு திட்டம் இருக்கிறதா?

பதில்:- கண்டிப்பாக நாங்கள் கிராமத்துக்கும் செல்வோம். அவர்களை பலப்படுத்தவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். கிராம பஞ்சாயத்து என்ற விஷயம் நாங்கள் கண்டுபிடித்தது அல்ல. கேட்பாரற்று கிடந்த அந்த யோசனையை நாங்கள் முன்மொழிந்தோம். அது இப்போது வலுப்பெற்று வருகிறது. கட்சியை வலுப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறைவால் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?

பதில்:- இதுதொடர்பாக நாங்கள் விவாதித்துக்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறதா?

பதில்:- சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் நீதி மய்யம் எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது. எங்களுடைய இலக்கு 2021 தேர்தல். அதனை நோக்கி நாங்கள் கவனமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு பயன் உள்ளதாக இருக்கும் எல்லா நிகழ்வுகளையும் செய்கிறோம்.

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத காங்கிரஸ் உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளோடு மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- கண்டிப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

அப்போது கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
2. கொரோனாவுக்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
கொரோனா தடுப்பு மருந்தை எப்போது கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. அதுவரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி.
4. வருகிற 2-ந் தேதியுடன் முடிவடைகிறது ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்-மந்திரி முடிவு செய்வார் மந்திரி ஆர்.அசோக் பேட்டி
வருகிற 2-ந் தேதி முடிவடைய உள்ள நிலையில் மேலும் 3 வாரங்களுக்கு ஞாயிறு முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார் என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளாார்.
5. உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி முறைகேடு குற்றச்சாட்டை கூறியது தவறு முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
உரிய ஆதாரம் இல்லாமல் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை கூறியது தவறு என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.