தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு - மத்திய அரசு கடும் எதிர்ப்பு + "||" + Citizenship Amendment Law: UN Human Rights Commission, Supreme Court - Cental Goverment Resistance

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு - மத்திய அரசு கடும் எதிர்ப்பு

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு - மத்திய அரசு கடும் எதிர்ப்பு
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் திடீரென ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்து, மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது.


இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதும், டெல்லியில் இந்த போராட்டங்களின்போது, வன்முறை வெடித்ததும் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதும் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் போட்டுள்ளனர்.

இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கடந்த டிசம்பர் 18-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ஐ.நா. மனித உரிமைகள் கமிஷனர் மிச்செல்லி பேச்லெட் ஜெரியா தரப்பில் திடீரென ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த நோக்கம் பாராட்டுதலுக்கு உரியது. ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்க வழி கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த நாடுகளில் (பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) மத ரீதியிலான சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களில் அகமதியா, ஹசாரா, ஷியா பிரிவினர் உள்ளனர். இவர்களது நிலைமையும், குடியுரிமை திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்படி பாதுகாப்பு பெற தக்கதாக உள்ளது.

* சர்வதேச மனித உரிமைகள் சட்டம், அவற்றை இடம் பெயர்ந்தோருக்கும், அகதிகளுக்கும் செயல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து முக்கிய பிரச்சினைகளை குடியுரிமை திருத்த சட்டம் எழுப்பி உள்ளது.

* இடம் பெயர்தல் நிர்வாக நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் அவை, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதை நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.

* இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துடன் குடியுரிமை திருத்த சட்டம் பொருந்துகிறதா என்பதை ஆராய்வதில் சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். எங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், தலையிட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் தெரிவித்து உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். இந்த நாட்டுக்கான சட்டம் இயற்றுவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மை வழங்கும் அடிப்படை உரிமை தொடர்பானதாகும்.

இந்தியாவின் இறையாண்மை தொடர்பான விஷயங்களில் தலையிடுவதற்கு அந்நிய தரப்பினர் யாருக்கும் முகாந்திரம் கிடையாது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் என்பது அரசியல் சட்டம் வழங்கும் வலிமையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இந்தியாவின் சட்டபூர்வமான நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தும் என்று நம்புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.