உலக செய்திகள்

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + Spanish PM's Wife Has Tested Positive for Coronavirus: PM's Offfice

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து அங்கும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மாட்ரிட்,

கொரோனா வைரசின் மையப்புள்ளி என உலக சுகாதார நிறுவனத்தால் வர்ணிக்கப்பட்ட ஐரோப்பாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இத்தாலியை தொடர்ந்து கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.


அந்த நாட்டில் இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,500 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,300 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செசின் மனைவி பெகோனா கோமசுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் பிரதமர் பெட்ரோ சான்செசுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் உள்ளதா? அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுமா? என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக கொரோனா வைரசின் தாக்கம் குறித்து பிரதமர் பெட்ரோ சான்செஸ் மந்திரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர் தொலைக் காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக நாட்டில் தேசிய நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

அமெரிக்கவை தொடர்ந்து ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய நெருக்கடி நிலை அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்குமென கூறிய அவர், நாடு முழுவதும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

வேலைக்காக, உணவு மற்றும் மருந்து வாங்க, ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல ஆகிய இன்றியமையாத சூழலை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீதிகளில் உலாவ தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிப்பதை போலீஸ் மற்றும் ராணுவம் உறுதி செய்யும் என பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ‘நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள் கடுமையானவை மற்றும் துரதிருஷ்டவசமானவை என்பதை நான் அறிவேன். ஆனால் வைரசுக்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றிபெற இது அவசியமாகிறது’ என்றார்.

நாடு முழுவதும் மருந்துகடைகள் மற்றும் சூப்பர்மார்க்கெட்டுகளை தவிர அனைத்து வியாபார நிறுவனங்களும், கடைகளும் மூடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.