மாநில செய்திகள்

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை பற்றி முதல் மந்திரி தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் + "||" + Coronavirus; Tomorrow's conference to be chaired by the CM on preventive action

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை பற்றி முதல் மந்திரி தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை பற்றி முதல் மந்திரி தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது பற்றி தமிழக முதல் மந்திரி பழனிசாமி தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு அந்நாட்டில் 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது.  பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து உலகம் முழுவதும் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமுடன் வைரஸ் பரவி வருகிறது.  ஆண், பெண் பேதமின்றி உலகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளதுடன், 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  கர்நாடகா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.  நாடு முழுவதும், இதுவரை 107 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று தமிழகத்திலும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனை அடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.  இதேபோன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மருத்துவமனைகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல் மந்திரி பழனிசாமி தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.  இதில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.