மாநில செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை + "||" + State MPs Election: Nominations reviewed today

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று (திங்கட்கிழமை) பரிசீலனை செய்யப்பட இருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
சென்னை, 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இந்த காலியிடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை பெறுவதற்காக, தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கடந்த 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்றைய தினம் அ.தி.மு.க. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை ஆகியோரும், அக்கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதுவரை, அ.தி.மு.க., அதன் கூட்டணி மற்றும் தி.மு.க. சார்பில் தலா 3 பேர் வீதம் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சைகள் 3 பேரும் வேட்புமனு கொடுத்துள்ளனர். கடந்த 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற இருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறையில் காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரையும் யாரும் முன்மொழியவில்லை. எனவே, அவர்களது வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்படும்.

நாளை மறுநாள் (18-ந் தேதி) வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். எனவே, அன்றைய தினம் மாலை 3 மணிக்கே 6 வேட்பாளர்களும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட இருக்கின்றனர். அதற்கான, சான்றிதழையும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் 6 எம்.பி.க்களுக்கும் வழங்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை எம்.பி. தேர்தல் : பா.ஜனதா சார்பில் ராம்தாஸ் அத்வாலே, உதயன்ராஜே போஸ்லே வேட்புமனு
மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, உதயன்ராஜே போஸ்லே ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.