தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31ந்தேதி வரை மூட அறிவுறுத்தல் + "||" + Corona Echo: Instructions to close educational institutions nationwide until March 31

கொரோனா எதிரொலி: நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31ந்தேதி வரை மூட அறிவுறுத்தல்

கொரோனா எதிரொலி:  நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31ந்தேதி வரை மூட அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31ந்தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 107 ஆக அதிகரித்து இருந்தது.  2 பேர் பலியாகி உள்ளனர்.  13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.  இன்று வரை 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் (பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட) மார்ச் 31ந்தேதி வரை மூட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  மாணவ மாணவியர் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.  ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படும்.

இதேபோன்று உடற்பயிற்சி கூடங்கள், மியூசியங்கள், கலாசார மற்றும் சமூக மையங்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் என அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களையும் மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.  குறைந்தது பொதுமக்கள் 3 அடி தூரம் இடைவெளியில் நடந்து செல்ல வேண்டும்.

பேருந்து, ரெயில் உள்பட பொது போக்குவரத்து துறையை மிக குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.  தேவையற்ற பயணம் தவிர்க்கப்படல் வேண்டும்.  நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்புகளை நீக்கும் ஒழுங்கான மற்றும் முறையான விசயங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மார்ச் 18ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.  இதேபோன்று ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து வந்தால் 14 நாட்கள் அவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.