தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில், வாராக்கடன் பற்றி காரசார விவாதம் துணைக்கேள்வி கேட்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு காங்கிரஸ் வெளிநடப்பு + "||" + Accessories to question the denial of permission to Rahul Gandhi Congress walkout

நாடாளுமன்றத்தில், வாராக்கடன் பற்றி காரசார விவாதம் துணைக்கேள்வி கேட்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு காங்கிரஸ் வெளிநடப்பு

நாடாளுமன்றத்தில், வாராக்கடன் பற்றி காரசார விவாதம்  துணைக்கேள்வி கேட்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு  காங்கிரஸ் வெளிநடப்பு
வாராக்கடன் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. இரண்டாவது துணைக்கேள்வி கேட்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி, வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதிக அளவில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் பதில் அளிக்க எழுந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபையில் இருக்கும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்தான் பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, “கேள்வி நேரத்தில் இணை மந்திரிகள் பதில் அளிப்பது வழக்கம்தான்” என்று கூறினார்.

பட்டியல் வெளியிட தயார்

பின்னர், அனுராக் தாக்குர் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் வங்கிகளில் நடந்த முறைகேடுகளுக்கு பா.ஜனதா அரசு மீது பழி சுமத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. மோடி அரசு, வங்கிகளின் சொத்து தகுதியை ஆய்வு செய்தது. பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வங்கிகளின் திறன் மேம்பட்டுள்ளது.

ரூ.25 லட்சத்துக்கு மேல் கடன் பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல், மத்திய தகவல் ஆணைய இணையதளத்தில் உள்ளது. என்னிடமும் பட்டியல் இருக்கிறது. சபாநாயகர் அனுமதி அளித்தால், அதை சபையில் தாக்கல் செய்கிறேன்.

மோடி ஆட்சியில், ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கோடி வாராக்கடன் மீட்கப்பட்டுள்ளது. வாராக்கடன் அளவு 0.18 சதவீதமாக குறைந்துள்ளது. தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

யெஸ் வங்கி பிரச்சினையை பொறுத்தவரை, பணம் பாதுகாப்பாக இருப்பதாக நிதி மந்திரி கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓவியங்கள் விற்பனை

அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, முதலாவது துணைக்கேள்வி கேட்டார். அவர் கூறியதாவது:-

இந்திய பொருளாதாரம் சிக்கலான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. வங்கிகள் திவால் ஆகின்றன அல்லது திவால் அடையப்போகின்றன. இதற்கு எண்ணற்ற நபர்கள், வங்கிப்பணத்தை திருடுவதுதான் காரணம்.

வங்கிப்பணத்தை திருடியவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து தண்டிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், நான் கேட்ட ஒரு கேள்விக்கே இன்னும் பதில் வரவில்லை. கடனை திரும்ப செலுத்தாதவர்களில் முதல் 50 இடங்களில் இருப்பவர்கள் பட்டியலை தரத் தயாரா?

இவ்வாறு அவர் கேட்டார்.

அதற்கு அனுராக் தாக்குர், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், ஓவியங்களை அதிக விலைக்கு வாங்க வங்கிகள் வற்புறுத்தப்பட்டன. ஆனால், உறுப்பினர் மோசமான கண்ணோட்டத்தில் கேள்வி எழுப்புகிறார்” என்று கூறினார்.

அனுமதி மறுப்பு

அதையடுத்து, பகல் 12 மணி ஆனதால், கேள்வி நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். அடுத்த அலுவலை தொடங்கினார். அதற்கு ராகுல் காந்தி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மரபுப்படி, தனக்கு இரண்டாவது துணைக்கேள்வி கேட்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால், அதை ஏற்காமல், சபாநாயகர் அடுத்த அலுவலில் கவனம் செலுத்தினார். ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். ராகுல் காந்திக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கோஷமிட்டனர். அதை சபாநாயகர் கண்டுகொள்ளாததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி
ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
2. புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியீடு
புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
3. அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு
அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
4. இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராகுல்காந்தி
இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
5. “நிர்மலா சீதாராமனை நீக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது” - பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி டுவீட்
நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்கிவிட்டால் மோடி தன் மீதான பழியை தீர்த்துக்கொள்ளலாம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.