தேசிய செய்திகள்

தமிழக எம்.பி.க்கள் துணைக்கேள்வி கேட்க அனுமதி மறுப்பு: “தமிழர்களுக்கு அவமதிப்பு” என்று ராகுல் காந்தி கண்டனம் + "||" + Rahul Gandhi: When you ask a question, you're allowed a supplementary.

தமிழக எம்.பி.க்கள் துணைக்கேள்வி கேட்க அனுமதி மறுப்பு: “தமிழர்களுக்கு அவமதிப்பு” என்று ராகுல் காந்தி கண்டனம்

தமிழக எம்.பி.க்கள் துணைக்கேள்வி கேட்க அனுமதி மறுப்பு: “தமிழர்களுக்கு அவமதிப்பு” என்று ராகுல் காந்தி கண்டனம்
அலுவல் மொழி பற்றிய பிரச்சினையில், நாடாளுமன்றத்தில் துணைக்கேள்வி எழுப்ப தமிழக எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழர்களுக்கு அவமதிப்பு என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அலுவல் மொழி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்தி மொழி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பேசப்படுகிறது. அதற்காக மற்ற மாநிலங்களின் தாய் மொழிகளுக்கு பாதிப்பு இருக்காது. எந்த மாநிலத்தின் மீதும் இந்தி திணிக்கப்படாது. இந்தி பேசாத மாநிலங்களிலும் பெருமளவில் இந்தி பயன்படுத்தப்படுவதை காண்பது அற்புதமானது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கூட சில பகுதிகளில் இந்தி பயன்படுத்தப்படுகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.

உடனே, டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களும், சில காங்கிரஸ் எம்.பி.க்களும் இருக்கையில் இருந்து எழுந்து கோஷமிட்டனர். இந்த பிரச்சினை குறித்து துணைக்கேள்வி எழுப்ப அனுமதி கோரினர். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக உறுப்பினர்கள், தங்கள் இருக்கைக்கு அருகிலேயே அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி குறுக்கிட்டார்.

“தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் உள்ள பிரச்சினை இது. எனவே, துணைக்கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும்“ என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். ஆனால், சபாநாயகர் அதை ஏற்காமல் அடுத்த கேள்விக்கு சென்றார்.

இதை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

திங்கட்கிழமை, நான் துணைக்கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதே அனுபவம், தமிழ் மொழி பற்றிய பிரச்சினையில் இதர எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்னை வேதனைப்படுத்திய திருப்தி, சபாநாயகருக்கு ஏற்பட்டு இருக்கும். அவர் நான் பேசுவதை விரும்பவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இது, ராகுல் காந்தி என்ற தனிநபர் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டு மக்கள், அவர்களது மொழி சம்பந்தப்பட்ட விவகாரம். அதுகுறித்து கேள்வி கேட்க அவர்களை அனுமதிக்கவில்லை. இது, தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமதிப்பு ஆகும்.

தமிழ் மொழி பற்றிய துணை கேள்வி கேட்க அனுமதிக்காததன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை சபாநாயகர் பறித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மீதும், அவர்களது மொழி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சபை, எல்லா மாநிலங்களுக்கும், எல்லா மொழிகளுக்கும் சொந்தமானது. எல்லா விவாதங்களும் நடக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக விவாதம் நடப்பதில்லை. யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இது, ஒரு வழிப்பாதையாக இருக்கிறது. மக்களவை, அரசின் ஒலிபெருக்கியாக மாறி விட்டது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

பின்னர், ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில், “தமிழ் மொழி பற்றி துணைக்கேள்வி எழுப்ப சபாநாயகர் அனுமதி அளிக்காததால், தமிழ்நாட்டு மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்“ என்று அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசை மட்டுமின்றி, பொருளாதார சீரழிவை எதிர்கொள்ளவும் இந்தியா தயாராக வேண்டும். பொருளாதார சுனாமி வீசி வருகிறது. ஆனால், நான் சொல்வதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. இன்னும் 6 மாதங்களில், கற்பனை செய்ய முடியாத வேதனையை மக்கள் சந்திக்க போகிறார்கள்.

பிரதமர் தனது தலையை மண்ணுக்குள் இருந்து வெளியே எடுக்க வேண்டும். சுற்றிலும் நடப்பதை பார்த்துவிட்டு செயல்பட தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி அடுத்த மாதம் சென்னை வருகை: 150 அடி உயர கொடி கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றுகிறார்
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் அடுத்த மாதம் அரசியல் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி வருகை தர உள்ளார். அப்போது 150 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியையும் அவர் ஏற்றுகிறார்.
2. மத்திய மந்திரியை ஆவேசமாக நெருங்கிய தமிழக எம்.பி... மக்களவையில் பரபரப்பு... அவை ஒத்தி வைப்பு
மக்களவையில் ராகுல் காந்தி குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
3. மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி?
ராகுல்காந்தி மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
4. பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது - ராகுல்காந்தி
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
5. என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் - ராகுல் காந்தி
என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.