தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை; இன்று நள்ளிரவு முதல் -உள்நாட்டு விமான சேவை ரத்து + "||" + No Domestic Flights From Wednesday, Says Centre Amid Coronavirus Crisis

கொரோனா தடுப்பு நடவடிக்கை; இன்று நள்ளிரவு முதல் -உள்நாட்டு விமான சேவை ரத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கை; இன்று நள்ளிரவு முதல் -உள்நாட்டு விமான சேவை ரத்து
உள்நாட்டு விமான சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கும் 400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் நோய் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா வரும் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக மக்கள் பயணம் செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு விமான சேவையையும் ரத்துசெய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இன்று நள்ளிரவு 11.59 மணிக்குள் தனது சேருமிடத்தை அடையும் விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும், அதன்பின்னர் எந்த விமானங்களும் இயக்கப்படாது எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் அனைத்து சரக்கு விமானங்களும் வழக்கம்போல இயக்கப்படும் எனவும் அவர் கூறினார். முன்னதாக, அனைத்து விதமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையமும் தனது டுவிட்டர் தளத்தில் தெளிவுபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.