மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு + "||" + 144 ban issued in Tamil Nadu

தமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

தமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தள்ளது.  வருகிற ஏப்ரல் 1ந்தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

இந்த உத்தரவின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அந்த வகையில், அத்தியாவசிய மற்றும் அவசர பணிகள் தவிர மற்ற பொதுபோக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலக பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும்.

எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உள்பட அனைத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.

இதேபோன்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூகமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும், மக்கள் தனித்தனியாக இருப்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய் சட்டத்தின் அடிப்படையில் சில ஒழுங்குமுறை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

* ஏற்கனவே உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய பயணிகள் வீட்டில் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களை மாவட்ட, வருவாய், உள்ளாட்சி, போலீஸ் அல்லது சுகாதார அதிகாரிகளில் யாராவது ஒருவர் தினமும் கண்காணிப்பார்கள்.

* மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கவேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வந்தாலும், மற்றவர்களுடன் 1 மீட்டர் அல்லது 3 அடி தூரம் இடைவெளி விட்டு விலகலை கடைபிடிக்கவேண்டும்.

* பொது இடங்களில் 5 பேருக்கு மேல் மக்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது.

* அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் இந்த உத்தரவில் விலக்கு அளிக்கப்படும் வரை மூடப்படும்.

* அனைத்து அரசு அலுவலகங்கள், சுயாட்சி நிறுவனங் கள், பொதுத்துறை நிறுவனங் கள் ஆகியவை இந்த உத்தரவில் விலக்கு அளிக்கப்படும் வரை மூடப்படவேண்டும்.

* தனியார் பஸ்கள், ஒப்பந்த வாகனங்கள், குளு, குளு வசதி கொண்ட பஸ்கள், மாநில போக்குவரத்துக்கழக பஸ்கள், மெட்ரோ ரெயில், டாக்சி, ஷேர்-ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் இயங்க அனுமதிக்கப்படாது.

* மாநிலங்களுக்கு, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன.

* அனைத்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகிற 31-ந்தேதி வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்றவேண்டும்.

* அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நடத்தும் விடுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய அளவிலான குளிரூட்டப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு பூங்கா, நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மிருககாட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சுற்றுலாதலங்கள், கடற்கடைகள் ஆகியவற்றில் இந்த கட்டுப்பாடுகள் தொடரும்.

* அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கும், பூஜைகளுக்கும் அனுமதி கிடையாது. ஆனால் தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.

*செவ்வாய்க்கிழமை (இன்று) பிளஸ்-2 தேர்வு நடைபெறும். ஆனால் 26-ந்தேதி நடைபெற இருந்த பிளஸ்-1 தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும், அரசு ஆள்தேர்வு நடவடிக்கைகளும் தள்ளிவைக்கப்படுகின்றன.

* கடந்த 16-ந்தேதி அல்லது அதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமணங்கள், அந்தந்த திருமண மண்டபத்தில் அதிகபட்சம் 30 பேர் கலந்துகொள்ளும் வகையில் நடத்திக்கொள்ளலாம். திருமண மண்டபங்களுக்கு முன்பதிவு செய்து, அது ரத்து செய்யப்படும் பட்சத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்திவிடவேண்டும்.

* கொரோனா வைரஸ் தொடர்பாக தொழில்நுட்ப உதவி மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் 044-29510400, 29510500, 9444340496, 8754448477 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிப்பு
தமிழகத்தில் தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2. தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது
தமிழகத்தில் தடையை மீறிய 17 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
3. பரமக்குடியில் தடை உத்தரவை மீறியவர்களுக்கு அபராதம் - போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் பொதுமக்கள்
பரமக்குடியில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.