மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைககள்; அ.தி.மு.க. நிதியுதவி அறிவிப்பு + "||" + Corona prevention measures; AIADMK Sponsorship Notice

கொரோனா தடுப்பு நடவடிக்கைககள்; அ.தி.மு.க. நிதியுதவி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைககள்; அ.தி.மு.க. நிதியுதவி அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்குகின்றனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.  இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.  2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, முறையே தங்களது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும் என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவ கருவிகளை வாங்க தமிழக அரசுக்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையை பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி வழங்குகின்றனர்.  இதன்படி, எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.