தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை; ரூ.1¾ லட்சம் கோடி நிவாரண உதவிகள் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு + "||" + Central government action following Corona disruption; Nirmala Sitharaman, Minister of Finance announces

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை; ரூ.1¾ லட்சம் கோடி நிவாரண உதவிகள் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை; ரூ.1¾ லட்சம் கோடி நிவாரண உதவிகள் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊடரங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

நாடு நடப்பு நிதி ஆண்டில் திட்டமிட்டபடி 5 சதவீத பொருளாதார இலக்கை அடைய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தரப்பினருக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருகிற வகையில் மத்திய அரசு நிதி சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் குரல் எழுந்தது.

இது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் சிறப்பு பணிக்குழு ஒன்றை பிரதமர் மோடி கடந்த வாரம் அமைத்தார்.

இந்த நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரோனா வைரசால் பாதிப்புக்கு ஆளாகி உள்ள நாட்டு மக்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி சலுகை திட்டங்களை அதிரடியாக அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் என பல தரப்பினருக்கும் பயன் அளிக்கத்தக்க திட்டத்தை அறிவிக்க அரசு பணியாற்றி வந்தது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 36 மணி நேரத்தில், மக்களின் கவலைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது. இதில் ஒன்று, ரொக்கமாக பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்துவது; மற்றொன்று உணவு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்தது ஆகும். யாரும் பட்டினி கிடப்பதையோ, பணமின்றி தவிப்பதையோ நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு கூறிய நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை அறிவித்தார்.

அதன் முழு விவரம் வருமாறு:-

* 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் தரப்படும்.

* விவசாயிகளுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் தவணை ரூ.2 ஆயிரம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும். இதன்மூலம் 8 கோடியே 69 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள்.

* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்கிறவர்களுக்கு ஒரு நாளைக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் 182 ரூபாயில் இருந்து 202 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் அவர்களுடைய மாத வருமானம் ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பலன் அடையும்.

* ஏழை விதவைப்பெண்கள், ஓய்வூதியதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கூடுதலாக தலா ரூ.1000 வழங்கப்படும். இது 3 மாதங்களில் 2 தவணைகளில் வழங்கப்படும். இதன்மூலம் 3 கோடி பேர் பலன் அடைவார்கள்.

* ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் தோறும் ரூ.500 வழங்கப்படும். இந்த தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இதன்மூலம் 20½ கோடி பெண்கள் பலன் பெறுவார்கள்.

* உஜ்வாலா திட்டத்தின் கீழ், வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிற 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா ஒரு கியாஸ் சிலிண்டர் வீதம் இலவசமாக வழங்கப்படும்.

* நாட்டில் 63 லட்சம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 7 கோடி குடும்பங்கள் பலன் பெறுகின்றன. இந்த குழுக்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் வழங்கக்கூடிய கடன் அளவு ரூ.10 லட்சம் என்பதை இரண்டு மடங்காக்கி ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

* அமைப்பு ரீதியிலான தொழிலாளர்களை பொறுத்தமட்டில், இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய மாத சந்தாவையும் (12 சதவீதம்), தொழில் நிறுவன அதிபர்கள் செலுத்த வேண்டிய அதே தொகையையும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும்.

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சந்தா செலுத்தும் தொழிலாளர்கள் தற்செயல் செலவுகளுக்காக தாங்கள் செலுத்திய தொகையில் 75 சதவீத தொகை அல்லது 3 மாத சம்பளம் இதில் எது குறைவோ அதை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அதை திரும்ப செலுத்த தேவையில்லை. இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிமுறைகளில் தேவையான திருத்தம் செய்யப்படும். இதன்மூலம் 4 கோடியே 80 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார் கள்.

* கட்டிட தொழிலாளர் களை பொறுத்தமட்டில் அவர்களுக்கென்று நல நிதி உள்ளது. அந்த வகையில் கட்டிட தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு ரூ.31 ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடும். இதன்மூலம் 3½ கோடி கட்டிட தொழிலாளர்கள் பலன்பெறுவார்கள்.

* கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளை காப்பாற்றுவதில் போர் வீரர்கள் போல் முன்னின்று துணிச்சலுடன் செயல்படுகிற டாக்டர்கள், நர்சுகள், ஆஷா பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிற அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள், சார்பு மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகம்
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு; ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி
ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 950 பேர் பலியாகி உள்ளனர்.
3. கொரோனா பாதிப்புக்கான் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
பாதிப்புக்கான தடுப்பூசி தயாராகி விட்டதா எப்போது பய்னபாட்டுக்கு வரும் உலக சுகாதார அமைப்பின்சிறப்பு பிரதிநிதி தகவல்
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்ந்து உள்ளது.
5. தாராவியை சேர்ந்தவர் கொரோனா பாதிப்பால் பலி- குடிசைப்பகுதி மக்களிடையே பரபரப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான மும்பை தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.