மாநில செய்திகள்

மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் + "||" + Opposition to the opening of liquor shops MK Stalin, Alliance Party Demonstrated wearing a black shirt

மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தனி மனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை, 

கொரோனா வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தது. தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள், வீடுகளில் கருப்பு அட்டை ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும், தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கருப்பு உடையணிந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கையில் கருப்பு கொடியையும், மற்றொரு கையில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு? என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்ட பதாகையையும் ஏந்தியிருந்தார். கருப்பு நிறத்தில் முக கவசமும் அணிந்திருந்தார்.

அவருடன் அவரது மனைவி துர்கா மற்றும் மகனும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கருப்பு நிற உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கக்கூடாது, குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கவேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பினர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கருப்புச் சட்டை அணிந்து முழக்கங்கள் எழுப்பி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் தனிமனித இடைவெளியுடன் கருப்பு அட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் சென்னை மண்ணாடியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைமை அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாஸ்மாக் கடை திறப்புக்கு கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் தம் வீட்டிற்கு முன்பு இந்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தினர். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சென்னையில் உள்ள தனது இல்லம் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருப்புக் கொடி, கண்டன ஆர்ப்பாட்ட முழக்கத்தில், வாழ்க்கை துயரங்களை தாங்கி வாழும் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு, பேராதரவு வழங்கியதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பாக வாழ்த்து களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கருப்பு உடையணிந்து மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மகளிரணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இதேபோல துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து மதுக்கடை திறப்பிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட பலர் தங்கள் வீடுகளின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.