மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு 2 பெண்கள் பலி + "||" + Coronavirus infection kills 2 in Chennai

சென்னையில் கொரோனா தொற்றுக்கு 2 பெண்கள் பலி

சென்னையில் கொரோனா தொற்றுக்கு 2 பெண்கள் பலி
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை, கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு பணிகளில் அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது.  ஊரடங்கு அமலில் உள்ளது.  எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என அரசு கூறி வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் உள்பட 3 பேர் நேற்று பலியாகினர்.  அவர்களில் ஒருவர் 77 வயது நிறைந்த சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்.  மற்றொருவர் கோயம்பேடு சந்தையை சேர்ந்த 56 வயது காய்கறி வியாபாரி ஆவார்.  இவர்கள் 2 பேருக்கும் முன்பே உடல்நல பாதிப்பு இருந்து வந்துள்ளது.

இவர்கள் தவிர சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு நேற்று பலியானார்.  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 5ந்தேதி சிகிச்சைக்காக சேர்ந்த அவருக்கு முன்பே உடல்நல குறைவு ஏற்பட்டிருந்தது.  இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை நேற்று 40 ஆக உயர்ந்து இருந்தது.

சென்னையில் இன்று கூடுதலாக 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 64 வயது மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்து உள்ளார்.  இவர் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.  இதேபோன்று வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதனால், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது.