மாநில செய்திகள்

மேலும் 4 பெண்கள் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி 44 ஆக உயர்வு - சென்னையில் 5 நாள் ஆண் குழந்தைக்கும் தொற்று + "||" + 4 more women die To Corona in Tamil Nadu Death toll rises to 44 5 day old boy infected in Chennai

மேலும் 4 பெண்கள் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி 44 ஆக உயர்வு - சென்னையில் 5 நாள் ஆண் குழந்தைக்கும் தொற்று

மேலும் 4 பெண்கள் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி 44 ஆக உயர்வு - சென்னையில் 5 நாள் ஆண் குழந்தைக்கும் தொற்று
கொரோனா வைரசால் 4 பெண்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், பிறந்து 5 நாளேயான ஆண் குழந்தைக்கும் நேற்று கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

கொரோனா வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி மத மாநாட்டில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்டோரை தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க, மறுபுறம் கொரோனா வைரசால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 526 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 664 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1,824 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த 70 வயது பெண் கடந்த 5-ந்தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைப்போல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண்ணும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது பெண்ணும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 4-ந்தேதி உடல்நலக் குறைவால் 73 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார். அவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் 279 பேர்

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 526 பேரில், சென்னையில் பிறந்து 5 நாளேயான ஆண் குழந்தை உட்பட 18 குழந்தைகள் மற்றும் 261 பேரும், விழுப்புரத்தில் 10 வயது ஆண் குழந்தை உட்பட 67 பேரும், செங்கல்பட்டில் 4 வயது பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் மற்றும் 37 பேரும், பெரம்பலூரில் 31 பேரும், திருவள்ளூரில் 12 வயது பெண் குழந்தை உட்பட 26 பேரும், காஞ்சீபுரத்தில் 4 வயது பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் மற்றும் 14 பேரும், அரியலூரில் 16 பேரும், திருவண்ணாமலையில் 15 பேரும், ராணிப்பேட்டையில் 10 பேரும், நெல்லையில் 8 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், கடலூரில் 3 பேரும், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, தஞ்சாவூர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 20 மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் கள் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.