மாநில செய்திகள்

மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு கொரோனா குணம் அடைந்து 987 பேர் வீடு திரும்பினர் + "||" + Corona for 83 Tamils from Mahastra

மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு கொரோனா குணம் அடைந்து 987 பேர் வீடு திரும்பினர்

மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு கொரோனா குணம் அடைந்து 987 பேர் வீடு திரும்பினர்
மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை,

மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையும் சேர்த்து மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 191 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் முதன்மை கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்கள் இடையே நிலவுகிறது. இருந்தபோதிலும் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வெளியில் சுற்றித்திரிகின்றனர்.


இந்த நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவரும் நிலையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 743 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 660 பேர் தமிழகத்தில் இருந்தவர்கள். மேலும் 83 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 442 ஆண்களும், 301 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 8 ஆயிரத்து 496 ஆண்களும், 4 ஆயிரத்து 692 பெண்களும், மூன்று 3-ம் பாலினத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மருத்துவமனைகளில் நேற்று நிலவரப்படி 7 ஆயிரத்து 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்து 59 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 987 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 882 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், திருவள்ளூரை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் சென்னையை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் அதிக மூச்சுத்திணறலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைப்போல் சென்னையை சேர்ந்த 70 வயது பெண், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 557 பேரும், செங்கல்பட்டில் 61 பேரும், திருவள்ளூரில் 23 பேரும், தூத்துக்குடியில் மராட்டியத்தில் இருந்து வந்த 21 பேர் உட்பட 22 பேரும், நெல்லையில் மராட்டியத்தில் இருந்து வந்த 16 பேரும், காஞ்சீபுரத்தில் 14 பேரும், திருவண்ணாமலையில் மராட்டியத்தில் இருந்து வந்த 11 பேரும், மதுரையில் மராட்டியத்தில் இருந்து வந்த 9 பேரும், விழுப்புரத்தில் 7 பேரும், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா 6 பேரும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுடெல்லியில் இருந்து தென்காசி வந்தவர்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 56 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 73 முதியவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 68 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 894 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 311 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 566 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 16 ஆயிரத்து 275 பேரின் மாதிரிகள் 2-வது முறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.