மாநில செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை சென்னையில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி + "||" + Motorists not wearing masks in Chennai have been fined Rs

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை சென்னையில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை சென்னையில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனா பரவலை தடுக்கும் ஆயுதமாக முக கவசம் உள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா நோயின் தீவிரத்தை உணராமல் பலர் அஜாக்கிரதையாக உள்ளனர். தமிழக அரசின் அறிவுரைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். எனவே சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து செல்பவர்களுக்கு ரூ.100-ம், வாகனத்தில் செல்பவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையை மீறி முக கவசம் அணியாமல் பலர் வெளியே சென்று வருகின்றனர்.


இந்தநிலையில் சென்னையில் முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் நேற்று ஆங்காங்கே வாகன தணிக்கைகளை நடத்தி கண்காணித்தனர். போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஆயுதப்படை போலீசாரும் இப்பணியில் ஈடுபட்டனர்.

முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி ரூ.500 அபராதம் விதித்தனர். பாக்கெட்டில் முக கவசம் வைத்திருந்தும் சிலர் அணியாமல் இருந்தனர். சிலர் முக கவசத்தை முகத்தில் மாட்டாமல் கழுத்தில் செயின் போன்று மாட்டி இருந்தனர். அலட்சியமாக இருந்ததால் அவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. கைக்குட்டையை முக கவசம் போன்று பயன்படுத்திவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் முககவசம் அணியாமல் அபராதத்துக்கு உள்ளானவர்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார். நடந்து சென்றவர்களுக்கும் முககவசங்களை கொடுத்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறும்போது, ‘இனிமேல் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது. அப்படி வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணியாமல் வாகனத்தில் வருவோருக்கு ரூ.500-ம், நடந்து வருபவர்களுக்கு ரூ.100-ம் அபராதம் வசூலிக்கப்படும்’ என்றார். அப்போது போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.