மாநில செய்திகள்

பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Government cancels ongoing libel cases against newspapers

பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட 19 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,

அரசின் ஜனநாயக பணிகளை கண்காணிக்கும் ஒரு அமைப்பாக பத்திரிகைகள் திகழ்கிறது என்று கருத்து கூறி தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட 19 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தினமலர், தினகரன், தமிழ்முரசு, முரசொலி, நக்கீரன், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய பத்திரிகைகள் மீது தமிழக அரசு சார்பில் 19 கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்யவேண்டும். இந்த வழக்குகளை தொடர மாநகர அரசு தலைமை வக்கீலுக்கு அனுமதி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், இந்த பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘சிறுதாவூர் பங்களா இருக்கும் இடம் தலித் மக்களுக்கு சொந்தமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியை வெளியிட்டதற்காக அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

அதேபோல, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிக்கையை வெளியிட்டதற்கும் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இவ்வாறு வழக்கு தொடர்வது ஜனநாயகத்தில் 4-வது தூணாக இருக்கும் பத்திரிகைகளின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது போல உள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும் அரசு செயல்படுகிறது ’ என்று வாதிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளை செய்தியாக வெளியிடும்போது, அதில் உள்ள கருத்துகளுக்கு பத்திரிகைகள் பொறுப்பாக முடியாது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் செய்யும் விமர்சனத்தை செய்தியாக பத்திரிகைகள் பிரசுரிக்கும். அதற்காக பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு தொடர்வது என்பது இயற்கை நியதிக்கு எதிரானது. அது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று பஞ்சாப் அரியானா ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜனநாயக நாட்டில், அரசு மீது குடிமக்களுக்கு பயம் இருக்கக்கூடாது. அதேபோல, குடிமக்களை அரசு தன் பிள்ளைகளாக பாவிக்க வேண்டும். பொதுவாக பிள்ளைகளால் பெற்றோர் அவமதிக்கப்படுவது வழக்கம் தான். தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும்போது மட்டுமே பிள்ளைகள் மீது பெற்றோர் என்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சிறு விஷயத்துக்காக பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

அவதூறு செய்திகளை வெளியிட்டதாக இந்த பத்திரிகைகள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகளை தொடர்வதற்கு அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோல அவதூறு வழக்குகளை பத்திரிகைகள் மீது தொடரும் செயல்களை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அதனால், மனுதாரர்களின் பத்திரிகைகள் மீது தொடரப்பட்டுள்ள 19 கிரிமினல் அவதூறு வழக்குகளையும் ரத்து செய்கிறேன்.

மேலும், ஒரு நீதிபதியாக இல்லை. இந்த நாட்டில் ஒரு சாதாரண குடிமகனாக கீழ் வரும் சில கருத்துகளை தெரிவிக்கிறேன். இந்திய ஜனநாயகத்தில் பத்திரிகைகள் 4-வது தூணாக உள்ளது. தேசத்தை கட்டிக்காப்பதில் பத்திரிகைகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுமட்டுமல்ல அரசின் ஜனநாயகப் பணிகளை கண்காணிக்கும் ஒரு அமைப்பாகவும் திகழ்கிறது. நம் நாட்டில் எப்போதும் பத்திரிகைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளன.

எனவே, மகாத்மா காந்தி சொன்னதுபோல, பத்திரிகைகளின் நோக்கம் மக்களின் சேவைக்காக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப, ஜனநாயகத்தை மேம்படுத்தவும், மக்களின் நலனுக்காகவும் பத்திரிகைகள் பணியாற்றவேண்டும்.

வாய்மைமே வெல்லும் என்பது நம் தேசத்தில் பொன்மொழியாகும். நாம் தேசியகீதத்துக்கும், தேசியக் கொடிக்கும், தேசிய சின்னத்துக்கும் மரியாதை செலுத்தும்போது, அதே மரியாதையை இந்த பொன்மொழிக்கு செலுத்த மறந்து விடுகிறோம்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...