மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி கைது அராஜக நடவடிக்கைகளை தி.மு.க. கைகட்டி வேடிக்கை பார்க்காதுமு.க.ஸ்டாலின் அறிக்கை + "||" + DMK Handcuffs are not fun Report of MK Stalin

ஆர்.எஸ்.பாரதி கைது அராஜக நடவடிக்கைகளை தி.மு.க. கைகட்டி வேடிக்கை பார்க்காதுமு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.எஸ்.பாரதி கைது அராஜக நடவடிக்கைகளை தி.மு.க. கைகட்டி வேடிக்கை பார்க்காதுமு.க.ஸ்டாலின் அறிக்கை
ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும் அராஜக நடவடிக்கைகளை தி.மு.க. கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சென்னை அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில், இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது வெறியாட்டத்தை நடத்தியிருப்பது வெட்கக் கேடானது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். ஊழல், கொரோனா தோல்வி ஆகியவற்றை மூடிமறைக்க ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளனர். பட்டியலின பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் சமத்துவ சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் தி.மு.க.வின் சீர்மிகு பணிகளை, எடப்பாடி பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் ரிங் மாஸ்டர்களோ களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது. இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களைப் பார்த்தெல்லாம் தி.மு.க. மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள்.

இந்த மாபெரும் மக்கள் இயக்கம், பனங்காட்டு நரி. சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது.

தி.மு.க.வினர் மீது முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் தூண்டுதலில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொய் வழக்குகள் புனைவது சட்டவிரோத ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் போன்ற அராஜக நடவடிக்கைகளை தி.மு.க. கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

கொரோனா என்ற கொடிய வைரசின் தாக்கத்தால் நாடே சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது, கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அணிந்திருக்கும் முகமூடி கிழிகிறதே என்ற ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில், உடனே அவரது வீட்டுக்குப் போலீசை அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி; அது தான் உண்மை.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். அப்படியானால் அவரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறையா?. கைது செய்திருப்பது தமிழகக் காவல்துறை என்றால், அரசுக்கு சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

பழங்குடிச் சிறுவனைச் செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரைக் கண்டிக்க முடியாத, பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய சிரிப்பு நடிகரைக் கைது செய்ய முடியாத, உயர்நீதிமன்றத்தையும், காவல் துறையையும் நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து அவதூறு செய்தவரைப் பிடிக்க முடியாதவர் பட்டியலின மக்களைக் காக்கத் தோள் தட்டிப் புறப்பட்டுள்ளதாக, பகல் வேடம் போடுவது வேடிக்கையானது; வினோதமானது.

திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கபட நாடகங்கள் எத்தனை நடத்தினாலும்; மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்துவதற்கு, தி.மு.க. எப்போதும் தயங்காது, தயாராகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.