சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பெய்ஜிங்
சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா - இப்போது சீனாவின் மூத்த தலைமை அமைப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளது - இது ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனா தனது பிராந்தியத்தில் முதன்முறையாக தனது சொந்த பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவுவதையும் இந்த சட்டம் வழி வகுக்கலாம்.
ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும்.
70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக உரிமைகள் கோரியும் பல ஆண்டுகளாக ஹாங்காங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
ஒட்டுமொத்த ஹாங்காங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை கைவிட்டது. ஆனாலும் சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சீனாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
அதனை தொடர்ந்து, ஹாங்காங் நிர்வாகத்தின் உதவியோடு ஜனநாயக ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தை சீனா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கையோடு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.