மாநில செய்திகள்

சென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி - இயல்பு நிலை திரும்புகிறது + "||" + Taxis and autos ran in Chennai After 2 months in Tamil Nadu People are happy because the buses are running

சென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி - இயல்பு நிலை திரும்புகிறது

சென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி - இயல்பு நிலை திரும்புகிறது
தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். நகை, துணிக்கடைகள் உள்பட பெரிய கடைகளும் திறக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது.
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ்,ரெயில், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது 4-வது கட்ட ஊரடங்கு முடிவடைந்து, நேற்று முன்தினம் முதல் 5-வது கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஏராளமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.


கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் 5-வது கட்ட ஊரடங்கை அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் பல தளர்வுகளை அறிவித்தார். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர தமிழ்நாட்டில் 1-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து நடைபெறும் என்றும், 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்றும், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

மேலும் டாக்சிகள், ஆட்டோக்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கூறிய அவர், பெரிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

அதன்படி, 68 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக கோவை, மதுரை, சேலம், திருச்சி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நேற்று பஸ்கள் ஓடின.

காலை முதலே பஸ்கள் ஓடத்தொடங்கின. பஸ்களை இயக்கும் முன் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். பஸ்களின் ஏறும் முன் பயணிகளும் கிருமி நாசினி மூலம் கைகளை செய்தனர். முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பஸ்களில் போதிய சமூக இடைவெளி விட்டு பயணிகள் அமர்ந்து இருந்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாகவும், 2 மாதங்களுக்கும் மேலாக பொது போக்குவரத்து இல்லாததாலும் வெளியே எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த மக்கள் நேற்று பஸ்கள் ஓடியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இனி எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் பஸ்சில் சென்று வரலாம் என்று பலர் உற்சாகத்துடன் கூறினார்கள்.

சுட்டெரிக்கும் வெயிலில் இரு சக்கர வாகனத்தில் செல்வதை விட, பஸ்சில் செல்வது வசதியாக இருப்பதாக மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பஸ்கள் ஓடின.
தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூர் அருகே அரசு பஸ் மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற ரத்தினம் என்ற விவசாயி பரிதாபமாக உயிர் இழந்தார். இவர் திருவாரூர் மாவட்டம் வேலங்குடி அருகே உள்ள கீழப்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த விபத்தில் ரத்தினத்துடன் ஸ்கூட்டரில் சென்ற அவரது தங்கை மகள் பலத்த காயம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ்கள் ஓடிய போதிலும், தடை காரணமாக சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

சென்னையில் நேற்று ஆட்டோக்கள், டாக்சிகள் (வாடகை கார்கள்) ஓடத்தொடங்கின. அரசு விதித்துள்ள கட்டுபாட்டின்படி ஆட்டோக்களில் அதிகபட்சம் 2 பயணிகளும், டாக்சிகளில் அதிகபட்சம் 3 பயணிகளும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால் 2 மாதங்களுக்கு பிறகு சென்னை நகர சாலைகள் பரபரப்பாயின.

இதேபோல் நகரில் பெரிய ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. கடைகளுக்கு கணிசமான வாடிக்கையாளர்களும் வந்தனர்.

இதனால் தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர் போன்ற வர்த்தக மையங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கின. இதேபோல் மற்ற ஊர்களிலும் துணி, நகைக்கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் நேற்று ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது.
மதுரையில் இருந்து விழுப்புரம் வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. அதாவது, மதுரையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு சென்னை புறப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்தான் தற்போது விழுப்புரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய 500-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த ரெயில், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவில், முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான அனுமதிச்சீட்டான ‘இ-பாஸ்‘ கட்டாயம் பெற வேண்டும் என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்த எஸ்.எம்.எஸ். தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பெரும்பாலான பயணிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் ஆன்லைனில் ‘இ-பாஸ்‘ விண்ணப்பம் செய்தனர். சில பயணிகள் இரவு நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.

இதனால், நேற்று காலை புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 396 பேர் மட்டுமே மதுரையில் இருந்து பயணம் செய்தனர். சுமார் 800 இருக்கைகள் காலியாக இருந்தன. இரவு நேரத்தில் திடீரென்று ‘இ-பாஸ்‘ கட்டாயம் என்றதால், நிறைய பயணிகள் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது.

இதேபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரு ரெயிலும், காட்பாடிக்கு ஒரு ரெயிலும் இயக்கப்பட்டது. திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

ரெயில் நிலையங்களுக்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. ரெயில் பெட்டிகளில் பயணிகள் ஏறுவதற்கு முன் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, வரிசையாக ஏறிச்சென்றனர். முன்னதாக ரெயில் பெட்டிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

பஸ், ஆட்டோ, டாக்சிகள், ரெயில்கள் ஓட தொடங்கியதாலும், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதாலும் தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி இருக்கிறது. பஸ் நிலையங்கள், சாலைகள், கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நீங்கி கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் போது, மக்களின் இயல்பு வாழ்க்கை முழுஅளவில் சீரடைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு 18.2 சதவீதமாக குறைந்துள்ளது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
‘தமிழக முதல்-அமைச்சரின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு 18.2 சதவீதமாக குறைந்துள்ளது’ என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
2. குடும்பத்தினரும் வெளியே வர கூடாது: சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் வீட்டு தனிமை - மாநகராட்சி அதிரடி உத்தரவு
சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் வீட்டில் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
3. சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட 600 பேருக்கு தொற்று இல்லாமல் குழந்தை பிறந்தது
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 191 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 600 பேருக்கு தொற்று இல்லாமல் குழந்தை பிறந்தது.
4. சென்னையில் டாக்டர் உள்பட 21 பேர் கொரோனாவுக்கு பலி - தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் டாக்டர் உள்பட 21 பேரின் உயிரை கொரோனா பறித்தது.
5. சென்னையில் கொரோனா இறப்பு விவரத்தை மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னையில் உள்ள அரசு தனியார் ஆஸ்பத்திரிகள் வாரியாக கொரோனா இறப்பு விவரத்தை மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.