நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜூலை 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு


நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜூலை 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2020 6:46 PM GMT (Updated: 2020-06-12T00:16:55+05:30)

நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜூலை 9-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டன்,

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

சிறையில் உள்ள நிரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீரவ் மோடி 11-ம் தேதி ஆஜா்படுத்தப்பட்டார். காணொலி முறையில் நடைபெற்ற விசாரணையில், நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜூலை 9-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சாமுவெல் கூஸீ உத்தரவிட்டார்.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கையும் இவா் தான் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை, வரும் செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என்றும் நிரவ்  மோடியிடம் நீதிபதி தெரிவித்தார்.

Next Story