தேசிய செய்திகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம் + "||" + Mumbai serial blast convict Yousuf Maman dies in jail

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யூசுப் மேமன் நாசிக் மத்திய சிறையில் இன்று மரணம் அடைந்து உள்ளார்.
மும்பை,

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டி பின்னணியில் இருந்து செயல்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் துபாய்க்கு தப்பிச்சென்றனர். பின்னர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் சென்று தஞ்சம் அடைந்தார். மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் சிறை வாசம் அனுபவித்து திரும்பினார். 24 ஆண்டுகளுக்கு பிறகு தாதா அபுசலீம் உள்ளிட்ட 6 பேரை குற்றவாளிகள் என்று தடா கோர்ட்டு கடந்த 2017ம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.

இதேபோன்று குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாகிர் மெர்ச்சண்ட் மற்றும் பெரோஸ்கான் ஆகியோருக்கு மும்பை தடா கோர்ட்டு அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.

தொடர்ந்து தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அரசால் அறிவிக்கப்பட்டார்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யூசுப் மேமன் கைது செய்யப்பட்டு நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர், தப்பியோடிய குற்றவாளியான டைகர் மேமனின் சகோதரர் ஆவார்.  சிறைவாசம் அனுபவித்து வந்த யூசுப் மேமன், திடீரென இன்று சிறையிலேயே மரணம் அடைந்து உள்ளார்.  இதனை சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.