மாநில செய்திகள்

சென்னையில் தீவிர முழு ஊரடங்கு: வெறிச்சோடி கிடக்கும் முக்கிய சாலைகள் + "||" + Extreme full curfew in Chennai

சென்னையில் தீவிர முழு ஊரடங்கு: வெறிச்சோடி கிடக்கும் முக்கிய சாலைகள்

சென்னையில் தீவிர முழு ஊரடங்கு: வெறிச்சோடி கிடக்கும் முக்கிய சாலைகள்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தலைநகர் சென்னையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை,

தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 19-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளை மளிகை கடைகள், மருந்தகங்கள், காய்கறிபழ கடைகள், பால் விற்பனை நிலையங்கள் பிற்பகல் வரை செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோர் மற்றும் உரிய அனுமதிச்சீட்டு (பாஸ்) பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.


ஏற்கனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளும் இல்லாத தீவிரமான முழு ஊரடங்கு கடந்த 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தளர்வு இல்லா தீவிர முழு ஊரடங்கு இன்று  மீண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கிலும் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், அலங்கார பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகளும், காய்கறிபழக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசமான இடங்கள் மட்டுமே செயல்படுகிறது.

மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் யாரும் உள்ளே, வெளியே செல்ல முடியாதபடி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி,  மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், 500க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தேவையின்றி வெளியில் நடந்து செல்லும் பொதுமக்களை எச்சரித்த போலீசார், வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா அதிகம் பாதித்த ராயபுரம், தண்டையார்பேட்டை திருவிக நகர் உள்ளிட்ட மண்டலங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.