மாநில செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்: சிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள்; சிறை துறை ஆவணம் தகவல் + "||" + Satankulam incident: Body injuries before being taken to jail; Prison Department

சாத்தான்குளம் சம்பவம்: சிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள்; சிறை துறை ஆவணம் தகவல்

சாத்தான்குளம் சம்பவம்:  சிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள்; சிறை துறை ஆவணம் தகவல்
சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்சை சிறைக்கு அழைத்து வரும் முன் அவர்களது உடலில் காயங்கள் இருந்துள்ளன என சிறை துறை ஆவணம் தெரிவிக்கின்றது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின்பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 22ந்தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். ஜெயராஜூம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் பலியானார்.

போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அரசியல் கட்சி தலைவர்கள், வணிக அமைப்புகள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து வருகிறார்கள். போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் தான் தந்தை, மகன் இருவரும் இறந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், சிறைக்கு அழைத்து வருமுன், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைத்துறை ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.