தேசிய செய்திகள்

போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான் + "||" + Rowdy Vikas Dubey arrested in police murder: Trapped in Madhya Pradesh

போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான்

போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான்
உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 8 போலீஸ்காரர்கள் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.

இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.

இதில் உடனடி பலனாக துபேயின் 2 கூட்டாளிகள் 3-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்போல அவனது வலது கரமாக விளங்கிய தயாசங்கர், போலீசார் வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தான்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் வைத்து நேற்று அந்த மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக கைது செய்தனர். அங்குள்ள புகழ்பெற்ற மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விகாஸ் துபேயை பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா உறுதி செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கான்பூரில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப்பின் எங்கள் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன் பலனாக தற்போது முக்கிய குற்றவாளியை நாங்கள் கைது செய்திருக்கிறோம். இது மத்திய பிரதேச போலீசின் மிகப்பெரும் சாதனை ஆகும்’ என்று தெரிவித்தார்.

விகாஸ் துபே, உஜ்ஜைனி கோவிலுக்குள் இருந்து கைது செய்யப்பட்டாரா? என்ற கேள்விக்கு அவர், ‘இதில் கோவிலை இழுக்காதீர்கள். கோவிலுக்கு உள்ளேயோ, வெளியேயோ... விகாஸ் துபே உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து விரிவாக விசாரித்த பின் நாங்கள் கூறுகிறோம். இது உளவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே அது குறித்து தற்போது கூற முடியாது’ என்று தெரிவித்தார்.

விகாஸ் துபேயை கைது செய்த உஜ்ஜைன் போலீசாரை முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் பாராட்டி உள்ளார். இது குறித்து மேலும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மகாகாளி கோவிலுக்கு போனால் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என நினைப்பவர்களுக்கு, மகாகாளியை பற்றி தெரியாது. எந்த குற்றவாளியையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த கைது நடவடிக்கை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் தெரிவித்து விட்டதாக கூறிய அவர், விகாஸ் துபே விரைவில் உத்தரபிரதேச போலீசில் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

அதன்படி ரவுடி விகாஸ் துபேயை தங்கள் மாநிலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உத்தரபிரதேச போலீசார் தயாராகி வருகின்றனர். இதற்கான பணிகள் அனைத்தும் வேகமெடுத்து உள்ளன. 8 போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபே 7 நாட்களுக்குப்பின் சிக்கியிருப்பது உத்தரபிரதேச போலீசாருக்கு நிம்மதியை கொடுத்து இருக்கிறது.

இதற்கிடையே விகாஸ் துபேயின் மேலும் 2 கூட்டாளிகள் நேற்று கான்பூர் மற்றும் இடாவா மாவட்டங்களில் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பிரபாத் என்பவனை பரிதாபாத்தில் கைது செய்து கான்பூர் அழைத்து வரும் வழியில் போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றதால் போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில் 2 போலீசாரும் காயமடைந்தனர்.

கான்பூரில் கடந்த 2-ந்தேதி போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து இதுவரை விகாஸ் துபேயின் 5 கூட்டாளிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 2 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூடுதல் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் தெரிவித்தார். துபேயின் கூட்டாளிகள் ஒருவரையும் தப்ப விடமாட்டோம் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம் உத்தரபிரதேச அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கான்பூர் கொடூர படுகொலை சம்பவம் தொடர்பாக சுறுசுறுப்பாக செயல்படுவதில் உத்தரபிரதேச அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. மாநிலத்தில் கூடுதல் உஷார் நிலை இருந்தபோதும் குற்றவாளி உஜ்ஜைன் சென்றிருப்பது, இங்குள்ள பாதுகாப்பில் உள்ள ஓட்டையையே காட்டுகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல விகாஸ் துபேவுக்கு பாதுகாப்பு அளித்தவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அம்பையில் பயங்கரம் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் கொலை மனைவி கைது
அம்பையில் அம்மிக்கல்லை தலையில் போட்டு டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
2. மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
3. மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது
மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
4. இந்து மதத்தை இழிவுபடுத்தி பேச்சு; சினிமா இயக்குனர் வேலுபிரபாகரன் கைது
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் சினிமா இயக்குனர் வேலுபிரபாகரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
5. நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவர் கைது உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்
நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவியை கொன்று காட்டில் வீசி சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த நண்பரும் போலீசில் சிக்கினார்.