தேசிய செய்திகள்

உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை + "||" + Vikas Dubey killed; 3 injured cops stable

உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை

உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
கான்பூர், 

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே (வயது 52) மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவன் மீது உள்ளூர்வாசி ஒருவர் கொடுத்த கொலை முயற்சி வழக்கில் விகாஸ் துபேயை கைது செய்வதற்காக அவனது கிராமமான பிக்ருவுக்கு கடந்த 2-ந்தேதி நள்ளிரவு போலீசார் சென்றனர்.

போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட விகாஸ் துபே, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் தனது வீட்டுக்குள் பதுங்கி இருந்தான். மேலும் போலீசார் தனது கிராமத்தை அடையாதவண்ணம் சாலைகளில் தடுப்புகளையும் ஏற்படுத்தி இருந்தான். எனினும் தடைகளை அகற்றி போலீசார் பிக்ரு கிராமத்துக்குள் நுழைந்து துபேயை கைது செய்ய முன்னேறினர்.

அப்போது கட்டிடம் ஒன்றின் மாடியில் பதுங்கி இருந்த துபேயும், அவனது கூட்டாளிகளும் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அவர்களின் ஆயுதங்களையும் பிடுங்கிக்கொண்டு தப்பி ஓடினர். நள்ளிரவில் அங்கு என்ன நடக்கிறது என போலீசார் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது மழைபோல துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தன.

இந்த கொடூர சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தப்பி ஓடிய துபே மற்றும் அவனது கூட்டாளிகளை வேட்டையாட 25-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் உத்தரபிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் சல்லடை போட்டு தேடினர். ஆனால் சுமார் ஒரு வாரமாக ரவுடி விகாஸ் துபே பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் புகழ்பெற்ற மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகளுடன் நேற்று முன்தினம் காலையில் விகாஸ் துபே சென்றான். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவனை அடையாளம் கண்டு கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது இரு மாநில அரசுகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட விகாஸ் துபேயை மத்திய பிரதேச போலீசார் நேற்று முன்தினம் மாலையில் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் அவனை சொகுசு கார் ஒன்றில் ஏற்றிக்கொண்டு கான்பூர் கொண்டு வந்து கொண்டிருந்தனர். மேலும் அந்த காருக்கு பின்னால் பாதுகாப்புக்காக போலீஸ் வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.

கான்பூர் அருகே நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் சாலை வழுக்கி விகாஸ் துபே இருந்த கார் கவிழ்ந்தது. இதில் சில போலீசாருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு விகாஸ் துபே தப்ப முயன்றான். அதன்படி காயமடைந்த ஒரு போலீஸ்காரரிடம் இருந்த துப்பாக்கி ஒன்றை பறித்துவிட்டு சுட்டவாறே தப்பி ஓடினான். ஆனால் சுதாரித்துக்கொண்ட மற்ற போலீசார் உடனே அவனை விரட்டிச்சென்று சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவனிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் இதை ஏற்காத துபே, போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்காக போலீசாரும் திருப்பி சுட்டனர். இதில் அவனது மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து அவன் சுருண்டு விழுந்தான்.

உடனே அவனை போலீசார் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்குசிகிச்சை பலனின்றி அவன் இறந்தான். பின்னர் அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவனுக்கு தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

8 போலீசார் படுகொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக விகாஸ் துபே கைது செய்யப்பட்டவுடன், அவனை கொல்லக்கூடாது என உத்தரபிரதேச அரசு மற்றும் போலீசாருக்கு உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக நடந்த தேடுதல் வேட்டையில் விகாஸ் துபேயின் 5 கூட்டாளிகள் பல்வேறு இடங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவனது குடும்பத்தினர், உதவியாளர்கள், கூட்டாளிகள் என 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் உத்தரபிரதேச அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறுகையில், ‘தற்போது குற்றவாளி போய்விட்டான். அவனை பாதுகாத்து வந்தவர்களை பற்றிய விவரங்கள் என்ன?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதைப்போல விகாஸ் துபே என்கவுண்ட்டர் மற்றும் கடந்த வாரம் நடந்த போலீசார் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டு உள்ளார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘இந்த சம்பவத்தில் கார் மட்டும் கவிழவில்லை, இந்த அரசு கவிழாமல் இந்த என்கவுண்ட்டர் காப்பாற்றியும் உள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது
சேரன்மாதேவியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கு; 4 பேர் கைது.
2. அம்பையில் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலி கொலை வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
அம்பையில் கள்ளக்காதலி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கொலை செய்ததாக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
3. காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது
காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
4. பள்ளி ஆசிரியரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது
பள்ளி ஆசிரியரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய தலைமை ஆசிரியர் கைது.
5. பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது
பூட்டிக் கிடக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த கொள்ளையனின் காதலி, கூட்டாளி கைது செய்யப்பட்டனர்.