சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக ஐ.நா கருத்து


சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக ஐ.நா கருத்து
x
தினத்தந்தி 12 July 2020 10:37 AM IST (Updated: 12 July 2020 12:38 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர்.

மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதன்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சர்வதேச  அளவில் கவனம் பெற்றுள்ளது. நியூயார்க்கில்  ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.  இது போன்ற மரணங்கள்  தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார்” என்றார். 

Next Story