கொரோனாவுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி - அமெரிக்க நிபுணர் எதிர்பார்ப்பு


கொரோனாவுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி - அமெரிக்க நிபுணர் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 July 2020 10:07 PM GMT (Updated: 2020-07-16T03:37:47+05:30)

கொரோனாவுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி வந்து விடும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை கலங்கடித்து வருகிற கொரோனாவுக்கு சாவு மணி அடிப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், சீனா என உலக நாடுகள் பலவும் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.

இதற்கிடையே உலகளவில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 1 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 5 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைவரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோணி பாசி, வாஷிங்டனில் கூறியதாவது:-

கொரோனாவுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி உருவாக்கப்பட்டு விடும. தற்போது உருவாக்கப்பட்டு வருகிற பல்வேறு தடுப்பூசிகள் பயனுள்ளவையா, பாதுகாப்பானவையா, இல்லையா என்பது தெளிவாக தெரிந்து விடும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி உருவாக்கி விட முடியும் என்றபோதிலும், அதன் பரவலான வினியோகத்துக்கு கொஞ்ச காலம் ஆகும்.

தடுப்பூசிகளைப்பொருத்தமட்டில் நாம் நல்ல இடத்தில் இருக்கிறோம். நாங்கள் நம்புகிறபடி நடந்து விட்டால், இந்த ஆண்டு இறுதியில் இருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி வந்து விடும்.

இந்த வாரம் அறிவிப்பு

இதுவரையில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புச்சக்தியை தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பது எது என்பது இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும்.

கொரோனா வைரஸ் எதிர்ப்புச்சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கேட்கிறீர்கள். இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பதில் அளிக்க ஓராண்டோ அல்லது அதற்கு சற்று கூடுதலான காலமோ எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு இடையே உலகமெங்கும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், பிறவற்றுக்கு இணையாக ரஷியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியின் முன்னேற்றத்தை கண்காணித்து, உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.

ரஷியாவை பொருத்தமட்டில், அதன் செச்செனோவ் பல்கலைக்கழகம், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தயாரித்து அளித்துள்ள தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது.

இதுபற்றி அதனுடன் தொடர்புடைய நிபுணர் அலெக்சாண்டர் லுகாசேவ் கூறுகையில், “மனித உடல்களில் தடுப்பூசி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அதன் பாதுகாப்பு நிரூபணமாகி இருக்கிறது. இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனை இந்த மாத இறுதி வரை நடைபெறும். இது உலக சுகாதார நிறுவனத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது” என குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைப்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி, பெரிய அளவிலான உற்பத்தியில் இறங்குவதற்கு முன்பாக 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளை கடந்து செல்ல வேண்டும்.

முதல் கட்ட சோதனையில், 100 பேர் வரையில் தடுப்பூசி செலுத்தி, தடுப்பூசியின் பாதுகாப்பும், சகிப்புத்தன்மையும் மதிப்பிடப்படும். இரண்டாவது கட்ட சோதனையில் ஆயிரம் பேர் வரை தடுப்பூசி செலுத்தப்படும். மூன்றாவது கட்ட பரிசோதனைதான் மிகப்பெரியது. இதில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்படும். இந்த மூன்றாவது கட்ட பரிசோதனையில் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை, செயல்திறன் உறுதி செய்யப்பட்டு விட்டால் வணிக ரீதியில் தயாரிப்பில் இறங்கி விடலாம். இந்த வகையில் தற்போது 23 தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

Next Story